நிம்மதியை குலைத்தது மோடி திட்டம் மீண்டும் பதவி கிடைக்குமா? அமைச்சர்கள் பீதி

தினகரன்  தினகரன்
நிம்மதியை குலைத்தது மோடி திட்டம் மீண்டும் பதவி கிடைக்குமா? அமைச்சர்கள் பீதி

புதுடெல்லி: மோடியின் புதிய அமைச்சரவையில் மீண்டும் இடம் கிடைக்குமா என்ற பீதியில் பல அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் பலர் மூட்டை முடிச்சுகளை கட்டி தயார்நிலையில் உள்ளனர்.மக்களவையின் மொத்த எம்பி.க்கள் எண்ணிக்கை 543. இதில், 15 சதவீதம் பேரை அமைச்சர்களாக நியமிக்கலாம் என அரசியல் சட்டம் நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி, அதிகபட்சமாக 81 அமைச்சர்களை நியமிக்கலாம். 2009ம் ஆண்டில் 2வது  முறையாக மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அமைத்த காங்கிரஸ், 71 அமைச்சர்களை நியமித்து ஆட்சியை நடத்தியது. 2014 தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரான மோடி, இந்த எண்ணிக்கையை 45 ஆக குறைத்தார். தனியாக இயங்கி  வந்த பல துறைகளை சிக்கன நடவடிக்கைக்காக ஒருங்கிணைத்தார். இதன் மூலம், துறைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால், அமைச்சர்களின் எண்ணிக்கையும் குறைந்தது.தற்போது, 2வது முறையாக பிரதமராக உள்ள மோடி, மத்திய அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளார். குறிப்பாக, வயதான அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதிய முகங்களுக்கு இடமளித்து, இளைஞர்களுக்கு வாய்ப்பு  அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது, அமைச்சர்களின் நிம்மதியை குலைத்துள்ளது.  தங்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்குமா என பீதியில் ஆழ்ந்துள்ளனர். இவர்களில் பல மூத்த அமைச்சர்களும் அடங்குவர். இதனால்,  அமைச்சர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டு பீதியுடன் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. பைல்களை ஓரம் கட்டிய அமைச்சரவை ஊழியர்கள்அமைச்சர்கள்தான் இப்படி என்றால், மத்திய அமைச்சர்களின் கீழ் செயல்பட்டு வந்த ஊழியர்களும் அவர்களுக்கு மேல் பீதியில் உள்ளனர். இதனால், தேர்தல் முடிவு வெளியான மறுநாளே, புதிய அமைச்சர்கள் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்  என கோப்புகளை எல்லாம் ஓரம் கட்டி வைத்துவிட்டனர். இதனால், நாடாளுமன்றத்தில் உள்ள அமைச்சரவை அலுவலகங்களில் பரபரப்பு நிலவுகிறது.

மூலக்கதை