தேர்தல் விதிகளை மீறியதாக புகார் : யோகி ஆதித்யநாத் 72 மணி நேரமும், மாயாவதி 48 மணி நேரமும் பிரச்சாரம் செய்ய தடை!

தினகரன்  தினகரன்
தேர்தல் விதிகளை மீறியதாக புகார் : யோகி ஆதித்யநாத் 72 மணி நேரமும், மாயாவதி 48 மணி நேரமும் பிரச்சாரம் செய்ய தடை!

டெல்லி : தேர்தல் விதிகளை மீறி பிரச்சாரத்தில் பேசியதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோரது பிரச்சார நேரத்தை குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 17வது மக்களை தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் முதற்கட்டமாக கடந்த ஏப்.,11ம் தேதி 20 மாநிலங்களில் நடைபெற்றது. மேலும் ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 7ம் தேதி சகரன்பூரில் நடைபெற்ற பிரச்சாரம் செய்த மாயாவதி, உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை தோற்கடிக்க வேண்டுமென்றால் இஸ்லாமியர்களின் வாக்குகள் சிதறாமல் தங்களது கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். அவரது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் கடந்த 9ம் தேதி பிரச்சாரலத்தில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு முஸ்லிம்கள் மேல் நம்பிக்கை இருந்தால், எங்களுக்கு ஹனுமன் மேல் நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து இருவரும் மதத்தை வைத்து அரசியல் செய்வதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கடந்த ஏப்., 11ம் தேதி யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 72 மணிநேரம், மாயாவதி 48 மணிநேரத்திற்கும் பிரச்சாரம் செய்ய தடை விதித்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சாதி, மதத்தை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை