பிரபல இந்தி நாளிதழில் வெளியான செய்தி ஓட்டு போடுலைனா வங்கி கணக்கில் ரூ350 ‘லபக்: வடமாநிலங்களில் பரவும் வைரல் வீடியோ

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரபல இந்தி நாளிதழில் வெளியான செய்தி ஓட்டு போடுலைனா வங்கி கணக்கில் ரூ350 ‘லபக்: வடமாநிலங்களில் பரவும் வைரல் வீடியோ

‘மக்களவை தேர்தலில் வாக்களிக்காதவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ. 350 பிடித்தம் செய்யப்படும்’ என்று தெரிவிக்கிற வகையில் பத்திரிகை செய்திகள் வந்ததால், வடமாநிலங்களில் பரபரப்பு ஏற்பட்டு, அது தொடர்பான வீடியோ வைரல் ஆகி வருகிறது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே மாதம் 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று, மே மாதம் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியாக உள்ளது.

நாடு முழுவதும் நடக்கும் தேர்தல் என்பதால், பெரும்பாலான மக்கள் பேசும் இந்தி மொழியில் வெளியாகும் செய்திகள், அவ்வப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. அந்தவகையில் ஒரு இந்தி செய்தித்தாளில், ‘மக்களவை தேர்தலில் வாக்களிக்காதவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ. 350 பிடித்தம் செய்யப்படும்’ என்ற செய்தி வெளியாகி இருந்தது.



மேலும், வாக்கு அளிக்காதவர்கள் அவர்களின் ஆதார் எண் அட்டை மூலம் அடையாளம் காணப்படுவர் என்றும், அதில் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும் என்றும், இதற்காக வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‘ஓட்டுப்போடாத ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் இருந்தும் ரூ. 350 கழிக்கப்படும்.

தங்களின் வங்கிக்கணக்கில் ரூ. 350 வைத்திருக்காதவர்கள், தங்கள் செல்பேசிக்குப் பணம் செலுத்தும்போது, இந்த அபராத தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். உச்சநீதிமன்றத்திடம் இருந்து தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அனுமதி பெற்றுவிட்டதால், இதற்கு எதிராக புகார் அளிக்க முடியாது’ என்று இந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.



செய்தியின் கடைசியில், ‘இந்த அறிவிப்பில் உண்மையில்லை’ என்ற அறிவிப்பு இருந்தது. தற்போது கொண்டாடப்பட்டு வரும் ஹோலி பண்டிகையின் நகைச்சுவை பிரிவில் செய்தி வெளியாகியிருப்பதால், இந்த செய்தியில் உண்மை ஏதுமில்லை என்பது பின்னர்தான் தெரியவந்தது.

அதேபோல், பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதி ஹபிஸ் சயீதை, பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டது என்றும், நிதி ேமாசடி செய்த விஜய் மல்லையாவும், நீரவ் மோடியும், தங்களின் பாவங்களை போக்குவதற்காக, கும்பமேளாவில் நீராடியுள்ளனர் என்று மற்றொரு போலி செய்தியும் வெளியாகியுள்ளது.

.

மூலக்கதை