விவசாயிகள் வருவாய் உறுதித்திட்டத்தில் ஏப்ரலில் 2வது ரூ.2000 மத்திய அரசு அறிவிப்பு

தினகரன்  தினகரன்
விவசாயிகள் வருவாய் உறுதித்திட்டத்தில் ஏப்ரலில் 2வது ரூ.2000 மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: ``பிரதமரின் விவசாயிகள் வருவாய் உறுதித்திட்டத்தின் கீழ் பதிவு செய்த சிறு, குறு  விவசாயிகளுக்கு 2ம் தவணைத் தொகையான 2000, அடுத்த மாதம் முதல் அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்’’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமரின் விவசாயிகள் வருவாய் உறுதித் திட்டம்’ கீழ் 2 ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். இந்த உதவித் தொகை 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். இதன் மூலம் 12 கோடி விவசாயிகள் பயனடைவர் என்றும், இத்திட்டத்துக்கு 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள 4.74 கோடி விவசாயிகளில், 2.74 கோடி  பேருக்கு முதல் கட்ட தவணை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.  விடுபட்டவர்களின் வங்கி கணக்கில் முதல் கட்ட தவணை இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும். மார்ச் 10ம் தேதிக்கு முன்னர் இதில் பதிவு செய்துள்ள  விவசாயிகளுக்கு முதல், 2ம் தவணை அளிக்கப்படும். 2ம் கட்ட தவணை அடுத்த மாதம் 1ம் தேதி முதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதற்காக விவசாயத்துறைக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது என்று மத்திய அரசின்  விவசாயத்துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.

மூலக்கதை