இந்திய ராணுவத்திற்காக போபர்ஸ் பீரங்கிகளின் மாடலில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு பீரங்கிகள்

தினகரன்  தினகரன்
இந்திய ராணுவத்திற்காக போபர்ஸ் பீரங்கிகளின் மாடலில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு பீரங்கிகள்

டெல்லி: இந்திய ராணுவத்திற்கு முதன்முறையாக அடுத்த வாரம் போபர்ஸ் பீரங்கிகளின் மாடலில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு பீரங்கிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. கடந்த 1989ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அரசால் ஸ்வீடன் நிறுவனத்திடம் ஆயிரத்து 437 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டவை போபர்ஸ் பீரங்கிகள் .இந்த பீரங்கி பேரத்தில் காங்கிரஸ் தலைவர்களுக்கு 66 கோடி ரூபாய் அளவுக்கு ஆதாயம் அளிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்ததால் நீண்டகாலமாக போபர்ஸ் பீரங்கி பேரம் தொடர்பான வழக்குகள் நடைபெற்றன. ஆயினும் போபர்ஸ் பீரங்கிகளின் தரத்தில் குறையில்லை என்பதால் ஸ்வீடன் நிறுவனத்திடம் கொள்முதல் செய்ய தடை விதிக்கப்படவில்லை. போபர்ஸ் பாணியிலான தொழில்நுட்ப முன் மாதிரியை வைத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனுஷ் பீரங்கிகள் சோதனையின் போது தகுதியற்றவையாக கருதப்பட்டன. இதன் தொழில்நுட்பத்தில் இருந்த பல்வேறு பிரச்சினைகள் கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு கட்டங்களாக தீர்க்கப்பட்டு இறுதியாக அதே வடிவிலான 114 பீரங்கிகளை உள்நாட்டிலேயே தயாரிக்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதியளித்தது. இதற்கான சில உதிரிபாகங்கள் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படுகின்றன.இதில் பதினெட்டு பீரங்கிகள் 2020ம் ஆண்டுக்குள் ராணுவத்தில் இணைக்கப்படுகின்றன. முதல் கட்டமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 5 போபர்ஸ் வடிவிலான பீரங்கிகள் மின்னணு ரீதியாக தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தனுஷ் என்ற பெயரில் ஜபல்பூரில் உள்ள ராணுவ துப்பாக்கித் தயாரிப்பு தொழிற்சாலையில் மார்ச் மாத இறுதியில் இணைக்கப்பட உள்ளன.

மூலக்கதை