தலைவர்களின் தேர்தல் பிரசாரத்துக்கு ஹெலிகாப்டர் ‘புக்கிங்’முடிஞ்சி போச்சு...!; 50 சதவீதம் பாஜ கட்சிக்கே ஒதுக்கீடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தலைவர்களின் தேர்தல் பிரசாரத்துக்கு ஹெலிகாப்டர் ‘புக்கிங்’முடிஞ்சி போச்சு...!; 50 சதவீதம் பாஜ கட்சிக்கே ஒதுக்கீடு

மத்திய, மாநில அரசுகள், தனியார் வசம் என்று நாட்டில் 275 பதிவுபெற்ற ஹெலிகாப்டர்கள் உள்ளதாக ரோட்டரி விங் சொசைட்டி ஆப் இந்தியா தெரிவிக்கிறது.   தேர்தல் காலங்களில் தலைவர்கள் பிரசாரம் செய்ய வசதியாக, 180 முதல் 250 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஹெலிகாப்டர்கள் பயன்பாடு அதிகமாக  உள்ளது. அந்தவகையில், பாஜ, காங்கிரஸ் உட்பட பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக சிறு  விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை மே 3வது வாரம் வரை ஏற்கெனவே முன்பதிவு செய்துவிட்டனர்.

இதனால் ஹெலிகாப்டர்களுக்கு கடும் கிராக்கி  நிலவுகிறது. இதுகுறித்து மும்பை ஹெலிகாப்டர் நிபுணர் பிரதீப் கூறுகையில், ‘ஒரு விமானி, 5 நபர்கள் அமரக்கூடிய கிங் ஏர் சி90 மற்றும் 2 விமானி, 8 நபர்கள்  அமரக்கூடிய கிங் ஏர் பி200 ரக ஹெலிகாப்டர்களுக்கு தேவை அதிகமாக உள்ளது. ஆனால் இந்த வகையைச் சேர்ந்த 2 டஜன் ஹெலிகாப்டர்கள் மட்டுமே  உள்ளதால் கடும் கிராக்கி நிலவுகிறது” என்றார்.

மொத்த ஹெலிகாப்டர்கள் முன்பதிவில் அதிகபட்சமாக 50 சதவீத ஹெலிகாப்டர்களை பாஜ கட்சி முன்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சிறு விமானங்கள்  மற்றும் ஹெலிகாப்டர்களின் ரகங்களைப் பொறுத்து, ஒரு மணி நேரத்துக்கான கட்டணம் ரூ. 75 ஆயிரம் முதல் ரூ. 3. 5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.   அதேநேரம் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3 மணி நேரத்துக்கு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்படுகிறது. அதேநேரம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜ தலைவர் அமித் ஷா ஆகியோர் பாதுகாப்பு கருதி இவ்வகை ஹெலிகாப்டர் களை பயன்படுத்துவதில்லை.   பிரதமர் மோடிக்கு மட்டும் பாதுகாப்பு கருதி, விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், தேர்தல்  நடத்தை விதிமுறைபடி மத்திய, மாநில அமைச்சர்கள் உட்பட வேறு யாரும் அரசு ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை