காங்கிரஸ் வேட்பாளர் 5வது பட்டியல் வெளியீடு: முன்னாள் ஜனாதிபதி மகனுக்கு ‘சீட்’: தமிழகத்திற்கு நாளை அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காங்கிரஸ் வேட்பாளர் 5வது பட்டியல் வெளியீடு: முன்னாள் ஜனாதிபதி மகனுக்கு ‘சீட்’: தமிழகத்திற்கு நாளை அறிவிப்பு

அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 5வது பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் ஆந்திராவுக்கு 22  வேட்பாளர்களும், மேற்கு வங்கத்துக்கு 11 வேட்பாளர்களும், தெலங்கானாவுக்கு 8 வேட்பாளர்களும், ஒடிசாவுக்கு 6, அஸ்ஸாமுக்கு 5, உத்தரப் பிரதேசத்துக்கு 3  வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். மேற்கு வங்கத்தில் இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை தீர்வுக்கு வராததால், காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டது.   இந்நிலையில், அந்த மாநிலத்துக்கும் சேர்த்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதில், முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்தரி, முன்னாள் மத்திய  அமைச்சரான மறைந்த பிரியரஞ்சன் தாஸ் முன்ஷியின் மனைவி தீபா தாஸ் முன்ஷி ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி கூறுகையில், ‘திமுக  தலைமையிலான கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.

யார், யார்  போட்டியிட தகுதியானவர்கள், வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் யார் என்பது குறித்து கண்டறிந்திருக்கிறோம். இது தொடர்பாக டெல்லியில் நடக்கும்  ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், வேட்பாளர்கள் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு, பட்டியலை நாளை (மார்ச் 20) காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி  வெளியிடுகிறார்’ என்றார்.



.

மூலக்கதை