கச்சத்தீவு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்: 5,000 பக்தர்கள் பங்கேற்பு

தினகரன்  தினகரன்
கச்சத்தீவு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்: 5,000 பக்தர்கள் பங்கேற்பு

ராமேஸ்வரம்: கச்சத்தீவு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் படகில் கச்சத்தீவு செல்கின்றனர்.கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா இன்று மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இரவு 8 மணிக்கு அந்தோணியார் தேர் பவனி, நாளை காலை 7 மணிக்கு திருப்பலி பூஜை என 2 நாட்கள் நடைபெறும்  விழாவில் பங்கேற்க, ராமேஸ்வரத்தில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 2,400க்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று புறப்பட்டு செல்கின்றனர். பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் ராமேஸ்வரம் துறைமுக  கடற்கரை சோதனை சாவடியில் அதிகாரிகளின் சோதனைக்குப்பின் படகுகளில் புறப்பட்டு செல்கின்றனர். அனைவருக்கும் மீன்வளத்துறை சார்பில் உயிர் காப்பு மிதவைகள் வழங்கப்பட உள்ளன. தடை செய்த பொருட்கள், வர்த்தக  பொருட்கள்,  பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச்சென்றால் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும். மேலும் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர், குற்ற வழக்குகள் உடையவர், இலங்கை அகதிகள் என தெரிய வந்தால்  அவர்கள் படகில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.2 நாள் விழா முடிந்து, கொடி இறக்கப்பட்டதும் நாளை காலை 11 மணிக்கு மேல் கச்சத்தீவில் இருந்து அனைவரும் படகில் ராமேஸ்வரம் திரும்புகின்றனர். இதற்காக அனுமதி பெற்றுள்ள 63 விசைப்படகுகள், 14 நாட்டுப்படகுகள்  அதிகாரிகளின் முழுமையான சோதனைக்குப்பின் நேற்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை ரோந்து கப்பல்கள் நேற்று முதல் கச்சத்தீவு கடல் பகுதியில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், 4  ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 2 நாள் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மூலக்கதை