மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள்: எல்லா கணக்கையும் தீர்த்து விடலாம்...பிரதமர் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள்: எல்லா கணக்கையும் தீர்த்து விடலாம்...பிரதமர் மோடி பேச்சு

ஜெய்ப்பூர்: மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். இந்த முறை எல்லா கணக்கையும் உரிய நேரத்தில் தீர்த்து விடலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் இன்று  பிற்பகல் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது, காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தோடு இந்தியா மட்டுமல்லாமல், உலகமும்  உள்ளது என்றார். புல்வாமா தாக்குதலில் தங்களது உறவினரை இழந்து தவிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வீரர்களின் குடும்பத்தாருக்கு நான் உறுதி அளிக்கிறேன். நமது எல்லையில் காவல் இருக்கும் வீரர்க்ள் மீது  நம்பிக்கை வையுங்கள். பவானி மாதா மீது நம்பிக்கை வையுங்கள். மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். இந்த முறை எல்லா கணக்கையும் உரிய நேரத்தில் தீர்த்து விடலாம் என்று கூறினார். பயங்கரவாதம் தொடரும் வரை உலகில் அமைதி நிலவும் சாத்தியம் இல்லை என்றும் தெரிவித்தார். காஷ்மீர் மாணவர்களை தாக்குவது போன்ற சம்பவம் இனி எங்கும் நடைபெறக்கூடாது; காஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம்,  காஷ்மீருக்கு எதிராக அல்ல. பயங்கரவாதம், மனிதநேய எதிரிகளுக்கு எதிராகத்தான் நாம் போராடி வருகிறோம் என்றும் காஷ்மீரை சேர்ந்த சகோதரிகளும், சகோதரர்களும் தீவிரவாதத்தின் பிடியில் இருந்து விடுபட வேண்டும்  என்றும் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் காஷ்மீர் தாக்குதலுக்கு இந்திய  ராணுவம் 100 மணி நேரத்திற்குள் பழிவாங்கியது என்றும் தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் பலத்துடன் நாம் முன்னேறி வருகிறோம் என்றும் இன்று பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்ட மனநிலை  உருவாகியுள்ளது என்றார்.  காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு எதிராக மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தீவிரவாதத்தை எவ்வாறு அழிப்பது என்பது தங்களுக்கு தெரியும் என்றும், இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்க முடியாது  என்றும் கூறினார்.

மூலக்கதை