காஷ்மீரில் பணியில் சேரும் துணை ராணுவ வீரர்கள் விமானத்தில் செல்லலாம்: மத்திய உள்துறை அனுமதி

தினகரன்  தினகரன்
காஷ்மீரில் பணியில் சேரும் துணை ராணுவ வீரர்கள் விமானத்தில் செல்லலாம்: மத்திய உள்துறை அனுமதி

புதுடெல்லி: சிஆர்பிஎப், துணை ராணுவ வீரர்கள் டெல்லி-காஷ்மீர் பயணத்துக்கு இனி விமானத்தை பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை அனுமதி அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து துணை ராணுவ வீரர்கள் பணியில் சேருவது அல்லது விடுப்பில் செல்வது போன்றவற்றுக்கு விமானத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்த அறிக்கையில், ‘டெல்லி-நகர், ஸ்ரீநகர்-டெல்லி, ஜம்மு-ஸ்ரீநகர் மற்றும் ஸ்ரீநகர் -ஜம்முவிற்கு செல்ல விமானத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விமான பயணத்துக்கான கட்டணத்தை அவர்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அரசின் இந்த அனுமதி மூலமாக காவலர், தலைமை காவலர் மற்றும் உதவி துணை ஆய்வாளர் அளவிலான 7.8 லட்சம் துணை ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள். பணியில் சேருவதற்கு அல்லது விடுமுறையில் செல்வதற்கு இந்த விமான பயணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்’  என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை