எரிக்சன் நிறுவன வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு அனில் அம்பானிக்கு 453 கோடி அபராதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
எரிக்சன் நிறுவன வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு அனில் அம்பானிக்கு 453 கோடி அபராதம்

புதுடெல்லி: ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி மீது சோனி எரிக்சன் நிறுவனம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு சோனி எரிக்சன் நிறுவனம் - அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து பணிபுரிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன. இந்நிலையில் மின்னணு பொருட்கள் கொள்முதலில் அனில் அம்பானியின் ஆர். காம் நிறுவனம் தங்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகை 550 கோடி ரூபாயை தரவில்லை என எரிக்சன் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கில் 2018 டிசம்பர் 15ம் தேதிக்குள் ஆர். காம் நிறுவனம் எரிக்சன் நிறுவனத்திற்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இதுவரை அந்நிறுவனம் அந்த தொகையை வழங்கவில்லை. மேலும் ஆர். காம் நிறுவனம் திவால் எனவும் அறிவிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால் அனில் அம்பானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது எரிக்சன் நிறுவனம். இதில், ‘அனில் அம்பானி குற்றவாளி’ என உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி 550 கோடி ரூபாயில் நிலுவை தொகையான 453 கோடி ரூபாயை 4 வாரங்களுக்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு தரவில்லை என்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இல்லை என்றால், அனில் அம்பானி 1 மாதம் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், நீதிமன்ற அவமதிப்பிற்காக ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் அபராதம் விதித்தும், 4 வாரத்தில் இந்த தொகையை உச்சநீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை