தூத்துக்குடியில் 13 பேர் பலியாக காரணமான ஸ்டெர்லைட் திறக்க தடை

தமிழ் முரசு  தமிழ் முரசு
தூத்துக்குடியில் 13 பேர் பலியாக காரணமான ஸ்டெர்லைட் திறக்க தடை

புதுடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்ற அமர்வு இன்று அதிரடியாக தடைவிதித்து உத்தரவிட்டது. அப்போது, தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்றும், தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க அதிகாரமில்லை என்றும் நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பளித்தது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு மே 22ம் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி நடந்த முற்றுகை போராட்டம் கலவரமாக மாறியதால், அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியாகினர். தொடர்ந்து தமிழக அரசு பிறப்பித்த சிறப்பு அரசாணை உத்தரவின்பேரில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இதை எதிர்த்து, அந்த நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்கலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி. எஸ். வைத்தியநாதன் தன் வாதத்தில், ‘‘ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பல விதிமுறைகளை இந்த விவகாரத்தில் கடைபிடிக்கவில்லை.

ஆலை நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் சல்பரிக், காப்பர், ஜிப்ஸம் ஆகிய கழிவுகள் நிலத்தடி நீரை கடுமையாக மாசுபடுத்தியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் எடுக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆலையை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு தாக்கல் செய்த அறிக்கையும், அங்கு இருக்கும் சூழலும் எதிர்மறையாக உள்ளது. அதனால் தீர்ப்பாயத்தின் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் ஸ்டெர்லைட் ஆலை திறப்பை கடுமையாக எதிர்த்து வாதிட்டார்.

இதே கோரிக்கையை முன்வைத்து தமிழக வழக்கறிஞர்கள் விஸ்வநாதன் மற்றும் குருகிருஷ்ணகுமார் ஆகியோரும் வாதிட்டனர். மேலும், மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் பாத்திமா என்பவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உட்பட 3 மனுக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், ஆலைக்கு ஆதரவாக ஆலையின் வேதாந்தா நிறுவனம் சார்பில் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டன.

மொத்தமாக, கடந்த 2013ம் ஆண்டு முதல், 7 வழக்குகள் உச்சநீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது.

முன்னதாக ஆலை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம், ஆலையை திறக்க அனுமதிக்கும்படி வாதிட்டார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் கடந்த 7ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ரோஹிண்டன் பாலி நாரிமன் மற்றும் வினீத் சரண் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று காலை 10. 30 மணிக்கு தீர்ப்பு வழங்கியது. அதில், ‘ஆலையை திறக்க தடை விதிக்கப்படுகிறது.

ஆலை ெதாடர்பான ரிட் மற்றும் அப்பீல் மனுக்கள் தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெற்றுக் கொள்ளலாம். உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுகின்றன.

தேசிய பசுமை தீர்ப்பாயம் இவ்வழக்கை விசாரிக்க எந்த அதிகாரம் இல்லை. தமிழக அரசின் சார்பில், ஆலை மூடியதற்கான அரசாணை தொடரும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் அதிரடியான உத்தரவால், தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக தீர்ப்பு எதிர்மறையான முறையில் வந்தால், அசம்பாவிதங்களை தவிர்க்க தென்மண்டல போலீஸ் ஐஜி சண்முகராஜேஸ்வரன், நெல்லை சரக டிஐஜி கபில்குமார் சரத்கர் ஆகியோர் மேற்பார்வையில் எஸ்பிக்கள் தூத்துக்குடி முரளிராம்பா, நெல்லை அருண் சக்திகுமார், நெல்லை மாநகர துணை ஆணையர் சுகுணாசிங் ஆகியோர் தலைமையில் 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள், கலெக்டர் அலுவலகம், எஸ். பி.

அலுவலக வளாகம், சிப்காட் வளாகம், சிப்காட் புறவழிச்சாலை, இந்திய உணவுக் கழக குடோன் ரவுண்டானா, தென்பாகம் காவல் நிலையம் முன்பு, தீயணைப்பு நிலையம், திரேஸ்புரம், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது, உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்துள்ளதால், போலீசாரின் பாதுகாப்பு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட மக்கள், இந்த தீர்ப்பால் மகிழ்ச்சியடைந்து இனிப்புகளை வழங்கினர்.

.

மூலக்கதை