புல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
புல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எங்கு ஒழிந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்; பிரதமர் மோடி

மும்பை: உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர்களின் வலிகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். உயிரிழந்த வீரர்களின் தியாகம் வீண் போகாது என்று பிரதமர் சூளுரைத்தார். சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் எவ்வளவு தான் ஒளிந்து கொள்ள முயற்சித்தாலும், அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி எச்சரித்தார். பாதுகாப்பு படையினருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சிஆர்பிஎப்) சேர்ந்த 2,500 வீரர்கள் 78 பேருந்துகளில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விடுமுறையை முடித்துவிட்டு பணிக்கு திரும்பியவர்கள். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் இந்த வாகனங்கள் நேற்று முன்தினம் மாலை 3.15 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது தற்கொலை படை தீவிரவாதி ஒருவன், வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து வீரர்கள் இருந்த பேருந்து மீது பயங்கரமாக மோதினான். இதில் பேருந்து சின்னாபின்னமாக வெடித்துச் சிதறியது. 100 கிலோ வெடிபொருளை காரில் ஏற்றி வந்த தீவிரவாதி இந்த தாக்குதலை நடத்தினான். இந்த பயங்கர தாக்குதலில் 41 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி, அரியலூர்  மாவட்டத்தை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற 2 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதலால் நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்துள்ளனர். தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய மற்றும் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை