பாதுகாப்புக்கும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அரசுடன் எதிர்கட்சிகள் துணை நிற்போம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

தினகரன்  தினகரன்
பாதுகாப்புக்கும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் அரசுடன் எதிர்கட்சிகள் துணை நிற்போம்; அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்

புதுடெல்லி: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்த கூட்டம் நாடாளுமன்ற நூலக அரங்கில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. இதில் குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சரத்பவார், டி.ராஜா, கனிமொழி, நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்கட்சிகள் பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மத்திய அரசுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்தை ஒழிக்க அரசின் பக்கம் துணை நிற்போம் என்று காங்கிரஸ் கடசி தெரிவித்தது. மேலும் புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதத்திற்கு எதிராகவும், தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு உறுதுணையாக இருப்போம் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சிஆர்பிஎப்) சேர்ந்த 2,500 வீரர்கள் 78 பேருந்துகளில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விடுமுறையை முடித்துவிட்டு பணிக்கு திரும்பியவர்கள். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் இந்த வாகனங்கள் நேற்று முன்தினம் மாலை 3.15 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது தற்கொலை படை தீவிரவாதி ஒருவன், வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து வீரர்கள் இருந்த பேருந்து மீது பயங்கரமாக மோதினான். இதில் பேருந்து சின்னாபின்னமாக வெடித்துச் சிதறியது. 100 கிலோ வெடிபொருளை காரில் ஏற்றி வந்த தீவிரவாதி இந்த தாக்குதலை நடத்தினான். இந்த பயங்கர தாக்குதலில் 41 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

மூலக்கதை