தொழிலாளிக்கு 80 லட்சம் பரிசு: கடந்த மாதம் ஏமாந்தவருக்கு இந்த மாதம் அடித்தது பம்பர்

தினகரன்  தினகரன்
தொழிலாளிக்கு 80 லட்சம் பரிசு: கடந்த மாதம் ஏமாந்தவருக்கு இந்த மாதம் அடித்தது பம்பர்

திருவனந்தபுரம்: கேரள அரசு லாட்டரியில் கடந்த மாதம் பரிசு கிடைத்ததாக நம்பி ஏமாந்த தொழிலாளிக்கு, இந்த மாதம் 80 லட்சம் பரிசு கிடைத்துள்ளது. கேரள மாநிலம், மலப்புரம் அருகே உள்ள பாண்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் யூசுப் (56). கூலி ெதாழிலாளி. இவர் அடிக்கடி லாட்டரி வாங்குவது வழக்கம். கடந்த மாதம் இவருக்கு கேரள அரசின் காருண்யா பிளஸ் லாட்டரியில் முதல் பரிசாக 80 லட்சம் கிடைத்ததாக தகவல் பரவியது. ஆனால், அது உண்மையில்லை என பிறகு தெரிய வந்தது. பரிசு கிடைத்ததாக நம்பி லாட்டரி சீட்டுடன் கடைக்கு சென்ற யூசுப், ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.இந்நிலையில், சில நாட்களுக்கு முன் மீண்டும் அதே காருண்யா பிளஸ் லாட்டரியை மனம் தளராமல் யூசுப் வாங்கினார். இந்த லாட்டரிக்கு நேற்று முன்தினம் குலுக்கல் நடந்தது. இதில், அவருக்கு முதல் பரிசான ₹80 லட்சம் கிடைத்தது. கடந்த மாதம் ஏமாற்றம் அடைந்தவருக்கு இந்த மாதம் அதே பரிசு கிடைத்தது கேரளாவில் பரபரப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பரிசு தொகையை பெற்றுக் கொண்ட அவர், அருகில் உள்ள கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்தார். யூசுப்பிற்கு லாட்டரியில் முதல் பரிசு கிடைத்த செய்தியை அப்பகுதி மக்கள் முதலில் நம்பவில்லை. இதுவும் புரளியாகவே இருக்கும் என்று கருதினர். ஆனால், அவர் பரிசுத்தொகையை வங்கியில் டெபாசிட் செய்த பிறகே மக்கள் நம்பினர்.

மூலக்கதை