அமமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல..... குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம்

தினகரன்  தினகரன்
அமமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல..... குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம்

டெல்லி : டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை நிரந்தரமாக வழங்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் தேர்தல்களில் குக்கர் சின்னம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தாக்கல் செய்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடிப்படையாக கொண்டு, தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் உட்பட எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த விசாரணையின் போது டிடிவி.தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “அதிமுகவிற்கு சொந்தமான இரட்டை இலை சின்னத்தை நாங்கள் ஒன்றும் கேட்கவில்லை. மேலும் சம்பந்தமே இல்லாத ஒரு சின்னத்தை எங்கள் தரப்பு தேர்தலில் போட்டியிட கேட்டாலும் இபிஎஸ், ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்’’ என வாதிட்டார்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு வாதத்தில்,” தமிழகத்தில் தற்போது உடனடியாக எந்த ஒரு தேர்தலும் நடைபெற வாய்ப்பில்லை. அதனால், குக்கர் சின்னத்தை டிடிவி.தினகரனுக்கு ஒதுக்கீடு செய்ய நீதிமன்றம் உத்தரவிடக் கூடாது’’ என வாதிடப்பட்டது.  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம்,  இதுதொடர்பாக விளக்கம் தர இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடந்த 17-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று குக்கர் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ஆஜராகி பதில்மனு தாக்கல் செய்தார். அதில் குக்கர் சின்னம் பொதுவான சின்னம் என்பதால் அமமுக கட்சிக்கு சின்னத்தை தர முடியாது. தேர்தல் நேரத்தில் தான் அம்முக கட்சிக்கு எந்த சின்னம் என்று முடிவு செய்யப்படும். அமமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல. பதிவு செய்யப்படாத ஒரு அமைப்புக்கு குறிப்பிட்ட சின்னத்தை ஒதுக்க முடியாது.  பொதுப்பட்டியலில் உள்ள சின்னத்தை தனிப்பட்ட கட்சி உரிமைகோர முடியாது என குறிப்பிடப்பட்டிருந்தது.

மூலக்கதை