எதிர்கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி; நாம் 125 கோடி மக்களுடன் கூட்டணி...பிரதமர் மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
எதிர்கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி; நாம் 125 கோடி மக்களுடன் கூட்டணி...பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: எதிர்க்கட்சிகளிடம் பணசக்தியும் நம்மிடம் ஜனசக்தியும் உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தற்போதைய மத்திய அரசின் ஆட்சிகாலம் சில மாதங்களில் முடிவடையுள்ள நிலையில்,  நாடாளுமன்றத்துக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஆளும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள்  தீவிர முயற்சி செய்து வருகின்றது. இந்நிலையில் எதிர்கட்சிகள் சார்பில் கொல்கத்தாவில் நேற்று 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 22 தலைவர்கள் திரண்ட பிரமாண்ட மாநாட்டு நடைபெற்றது. மாநாட்டில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மோடி அரசின் காலாவதி தேதி முடிந்து விட்டது: பிரதமர் யார் என்று தேர்தலுக்கு பிறகு முடிவு செய்வோம் என்றார். பிரதமர் மோடி நேற்று பதிலடி கொடுக்கையில்,  பொது மக்களின் பணத்தை சிலர் (எதிர்க்கட்சிகள்) கொள்ளையடித்து வந்தனர். ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கைகள், அவர்களிடமிருந்து மக்களைக் காப்பாற்றின. இதனால் அவர்கள் கோபமடைந்தனர். அவர்கள்தான் மகா  கூட்டணி அமைத்துள்ளனர் என்று விமர்சனம் செய்தார். இந்நிலையில் கோவாவில் உள்ள 5 பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் முன்னேற்பாடாக பா.ஜ.க.வை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுடன் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் பேசினார். அப்போது  பேசிய பிரதமர், நவீன கோவாவை வடிவமைக்கும் சிற்பியும் எனது நண்பருமான கோவா முதல் அமைச்சர் மனோகர் பாரிக்கர் விரைவில் பூரண நலமடையை பிரார்த்தித்து கொள்கிறேன். இந்த நிலையிலும் அவர் பணியாற்றி  வருவது நமக்கெல்லாம் ஊக்கசக்தியாக உள்ளது என்றார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் எதிர்க்கட்சியினர் இப்போதே வாக்குப்பதிவு இயந்திரங்களை வில்லனாக  சித்தரித்து பேசி வருகின்றனர். முன்னர் வாக்குச்சீட்டு தேர்தல் முறையை எதிர்த்தவர்கள் இப்போது தங்களது நிறத்தை மாற்றிகொண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை குறைகூற தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்தார். அவர்கள் தங்களுக்குள் கூட்டணியை வைக்கிறார்கள். நாம் 125 கோடி மக்களுடன் கூட்டணியை வைத்துள்ளோம். எந்த கூட்டணி பலம் வாய்ந்தது? கொல்கத்தா மாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்கள்  செல்வாக்கு  கொண்டவர்களின் வாரிசு அல்லது அவர்களது சொந்த குழந்தைகளை அரசியலில் வளர்க்க முயற்சி செய்பவர்கள்.அவர்கள் ஒன்றாக இணைகிறார்கள் என்றார். பணக்காரர்களின் கூட்டணியாகும். மாமன், மச்சான் கூட்டணியாகும்.  ஊழல், எதிர்மறை, உறுதியற்றநிலை, சமத்துவமில்லாத கூட்டணியாகும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மூலக்கதை