கோட்டையில் துணை முதல்வர் சிறப்பு பூஜை நடத்தினாரா?

தினமலர்  தினமலர்
கோட்டையில் துணை முதல்வர் சிறப்பு பூஜை நடத்தினாரா?

சென்னை, தலைமை செயலகத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், விடிய விடிய யாகம் நடத்தியதாக, சர்ச்சை எழுந்துள்ளது.

'முதல்வர் பதவியை பெற, யாகம் நடத்தி உள்ளார்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ள நிலையில், 'யாகம் என்பதெல்லாம் வதந்தி' என, மீன் வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.

பன்னீர்செல்வம்

சென்னை தலைமை செயலகத்தின், முதல் தளத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் அறை உள்ளது. இங்கு நேற்று அதிகாலை, பிரம்ம முகூர்த்தத்தில், 3:30 மணிக்கு துவங்கிய சிறப்பு பூஜை மற்றும் யாகம், காலை, 8:30 மணி வரை நடந்ததாகவும், இதில், பன்னீர் செல்வம் பங்கேற்றதாக வும் கூறப்படுகிறது. இது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, ஆளுங்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:துணை முதல்வர், பன்னீர்செல்வம், தன் அறையை புதுப்பித்துள்ளார். சுவாமி கும்பிடும் வகையில், அங்கு சாதாரண பூஜை நடத்தி உள்ளார். தன் இஷ்ட தெய்வதற்கு, தேங்காய், பழங்கள் படைத்து, அர்ச்சகர் மந்திரம் ஓத, அவர் வழிபட்டுஉள்ளாரே தவிர, யாகம் நடத்தவில்லை.

துணை முதல்வர் அறை, யாகம் நடத்தும் அளவிற்கு வசதி கிடையாது. தன் துறையில் உள்ள பணிகளையும், கட்சி பணிகளையும், சிறப்பாக செய்து வருவதை பிடிக்காமல், அவருடைய எதிரிகள் சிலர், விஷம பிரசாரத்தை பரப்பியுள்ளனர்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் கூறின.

இந்நிலையில், சென்னை யில் நடந்த திருமண விழா ஒன்றில், ஸ்டாலின் பேசியதாவது:துணை முதல்வர் பன்னீர்செல்வம், தலைமை செயலகத்தில் உள்ள தன் அறையில் யாகம் நடத்தி உள்ளார். ஜெ., சிறை சென்றது போல, கோடநாடு வழக்கில், முதல்வர் பழனிசாமி சிறைக்கு சென்று விடுவார்; முதல்வர் பதவி காலியாக போகிறது என்பதால், அந்த பதவியை கைப்பற்ற, பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக, கூறுகின்றனர்.முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டு யாகம் நடத்தினாரா அல்லது அங்குள்ள கோப்புகளை எடுத்ததற்காக யாகம் நடத்தினாரா என்பதற்கு, பன்னீர்செல்வம் பதில் சொல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் மறுப்பு :



பன்னீர்செல்வம் மீது, ஸ்டாலின் சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து, சென்னையில், மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் அளித்த பேட்டி:தலைமை செயலகத்தில், பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக கூறுவது ஆதாரமற்றது; அது ஒரு வதந்தி. அ.தி.மு.க., எந்த சூழ்நிலையிலும், தனித்தன்மையை இழக்காது.

எடுபிடி, துதி பாடுவது, அடிமை சாசனம் என்பது, அ.தி.மு.க.,வின் அகராதியில் கிடையாது. 'கெடுவான், கேடு நினைப்பான்' என்ற பழமொழிக்கேற்ப, எதிரிகள் கெட்டுப் போவர்.காலை எழுந்தவுடன், ஆட்சிக்கு எதிராக என்ன சூழ்ச்சி செய்யலாம் என, நினைக்கின்றனர். கட்சிக்குள் பிளவு ஏற்படுத்த ஸ்டாலின், தினகரன் சேர்ந்து செய்யும் சதி தான், இது.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

மூலக்கதை