பாஜவுக்கு எதிராக கொல்கத்தாவில் பேரணி: 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாஜவுக்கு எதிராக கொல்கத்தாவில் பேரணி: 22 கட்சி தலைவர்கள் பங்கேற்பு

கொல்கத்தா: மத்திய பாஜ அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து நடத்தும் பேரணி மற்றும் ெபாதுக்கூட்டத்தில் 40 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காலையில் நடந்த பேரணியில் காங்கிரஸ், திமுக, தெலுங்குதேசம், திரினாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேடு மைதானத்தில், மத்திய பாஜவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பேரணியை திரிணாமுல் காங்கிரஸ் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில், உத்தரபிரதேசத்தில் புதிதாக உருவாகியுள்ள சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணியும் கலந்து கொண்டன.

சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் சார்பில் மூத்த தலைவர் சதீஷ் சந்திரா மிஸ்ரா கலந்து கொண்டனர். அதேபோல், ராஷ்டிரிய லோக் தளம் சார்பில் அஜித் சிங் மற்றும் ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திமுக தலைவர் ஸ்டாலின், முதன்மை செயலாளர் டி. ஆர். பாலு, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடா, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசியமாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களோடு, பாஜ அதிருப்தி எம்பி சத்ருகன் சின்காவும் கலந்து கொண்டார். இந்தப் பேரணியில் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய பேரணி, மாலை வரை நடந்தது. மாலையில், ‘ஒன்றுபட்ட இந்தியா’ என்ற தலைப்பு இந்த மாநாட்டிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மம்தா, 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். இன்று காலையில் டுவிட்டர் பதிவு செய்த மம்தா பானர்ஜி, ‘‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு தொடங்குவதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ளன.

லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆதரவால் இன்றைய மாநாடு வலிமையான, வளர்ச்சி மிகுந்த ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கும்’’ என்று கூறியுள்ளார்.

மம்தாவின் மாநாட்டிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மம்தாவுக்கு கடிதம் அனுப்பியுள்ள ராகுல் காந்தி, தனது தரப்பில் இருந்து மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, அபிஷேக் மனு சிங்வி ஆகியோரை பங்கேற்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

போலீசார் அளித்த தகவலின்படி மாநாடு நடைபெறும் பிரிகேட் மைதானத்தில் 7 லட்சம்பேர் மட்டுமே பங்கேற்க முடியும். ஆனால் 40 லட்சம் பேர் வருவார்கள் என்று திரிணாமுல் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மாநாட்டிற்காக கடந்த சில வாரங்களாக திரிணாமுல் கட்சித் தொண்டர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மாநாட்டிற்காக 20 பிரமாண்டமான எல்இடி - டிவிக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பை பொறுத்தளவில் மாநாடு நடைபெறும் பகுதி 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 3,000 திரிணாமுல் கட்சி தொண்டர்களும் போலீசாருக்கு உதவியாக களத்தில் உள்ளனர்.

‘பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்’ என்று காங்கிரஸ் கட்சி அறிவிக்கவில்லை.

ஆனால், பாஜ கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் காங்கிரசின் நிலைப்பாடாக உள்ளது. இன்றைய கொல்கத்தா கூட்டத்தில் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவில்லை.

அவர்கள், பாஜவுக்கு எதிரான நிலைபாட்டில் இருந்தாலும், மம்தா அழைத்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டனர். இந்த மாநாட்டை விமர்சித்துள்ள பாஜ, ‘அரசியலில் ஓய்வு பெற்றவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடுகின்றனர்’ என்று குறிப்பிட்டுள்ளது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மாநில எதிர்கட்சிகளுக்கும் பேரணி மற்றும் கூட்டத்தில் பங்கேற்றது அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை