எதிர்கட்சித்தலைவர்கள் நலம் விசாரிப்பு.. பாஜ தலைவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
எதிர்கட்சித்தலைவர்கள் நலம் விசாரிப்பு.. பாஜ தலைவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

* தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல்
* நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு அமெரிக்காவில் சிகிச்சை
* அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு நுரையீரல் தொற்று

புதுடெல்லி : பாஜ தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல், அமைச்சர் அருண்ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பரிசோதனை, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு என, 3 மூத்த தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் நலம்பெற பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மத்திய நிதியமைச்சரும், பாஜ மூத்த தலைவருமான அருண் ஜெட்லி (66), கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு திடீரென அவர் புறப்பட்டுச் சென்றார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தபிறகு, ஜெட்லி வெளிநாடு பயணம் செல்வது இதுவே முதல்முறையாகும். அறுவை சிகிச்சை தொடர்பாக, பரிசோதனைக்காக அவர் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே டாவோஸில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் அவர் கலந்து கொள்வாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருந்தும், ‘பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பாஜ அரசின் இடைக்கால பட்ஜெட்டை அருண் ஜெட்லி தாக்கல் செய்வார்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அருண் ஜெட்லி விரைவில் குணமடைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் உடல்நலம் விசாரித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இவரை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை இரவு, மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின்  உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னதாக மூக்கடைப்பு  உள்ளிட்ட மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்தது. அங்கு, அவருக்கு  நுரையீரல் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   இந்நிலையில், நேற்று ரவிசங்கர் பிரசாத்  குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘அமைச்சர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

எனினும், விரைவில் சாதாரண  பிரிவுக்கு மாற்றப்படுவார். அவரது உடல்நிலை சீராக உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜவின் இரு மத்திய அமைச்சர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட அமித் ஷா திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, கேரளா, தமிழகத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் வகையில் பயண திட்டமும்  வகுக்கப்பட்டிருந்தது. அவருக்குப் பன்றி காய்ச்சல் தொற்று இருப்பதாக,  மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.

இதனால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது. உடல்நலம் குன்றியுள்ளது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமித்  ஷா, `எனக்குப் பன்றிக் காய்ச்சல் தொற்று உள்ளது.

சிகிச்சை தொடர்ந்து  நடைபெற்று வருகிறது.

கடவுளின் அருளாலும், உங்களின் அன்பு மற்றும்  வாழ்த்துகளாலும் விரைவில் உடல்நலம் பெறுவேன்’ என்று கூறியுள்ளார்.

.

மூலக்கதை