கொடநாடு கொலையில் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றச்சாட்டு : கைது செய்யப்பட்ட 2 பேரும் சொந்த ஜாமீனில் விடுவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொடநாடு கொலையில் எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றச்சாட்டு : கைது செய்யப்பட்ட 2 பேரும் சொந்த ஜாமீனில் விடுவிப்பு

புதுடெல்லி : எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம்சாட்டிய வழக்கில், ஆதாரம் இல்லாமல் மீண்டும் மீண்டும் ஆஜர்படுத்தியதால், கொடநாடு கொலை குற்றவாளிகள் இருவரையும் ஜாமீனில் விடுவித்து மாஜிஸ்திரேட் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 24ம் தேதி சென்ற ஒரு கும்பல், காவலாளியை கொலை செய்துவிட்டு, அங்கிருந்த ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது.

இந்த விவகாரத்தில் கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், பணத்தை கொள்ளையடிக்கவில்லை.

அதற்கு பதில் முக்கிய ஆவணங்களை ஒரு பையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்று விட்டதாக கூறியிருந்தனர். முக்கிய குற்றவாளியாக கூறப்பட்ட கனகராஜை போலீசார் தேடி வந்த நிலையில், சேலம் அருகே வாகனம் மோதி மர்மமான முறையில் அவர் உயிரிழந்தார்.

தொடர்ந்து கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் சயானின் மனைவி, மகள் ஆகியோரும் சாலை விபத்தில் உயிரிழந்தனர். சயான் மட்டும் படுகாயடங்களுடன் உயிர் தப்பினர்.

கொடநாடு விவகாரத்தில் அடுத்தடுத்தது 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்தனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் நிலையில் திடீர் திருப்பமாக தெகல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், கூலிப்படை தலைவன் சயான், மனோஜ், வாளையார் ரவி உட்பட 6 பேர் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக பேட்டியளித்து, கொடநாடு வழக்கு தொடர்பாக 16 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஆவணங்களையும் பத்திரிகையாளர்கள் முன்பு வெயியிட்டனர்.

இது, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், டெல்லி சென்ற மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படையினர் கடந்த சனிக்கிழமை மாலை கூலிப்படை தலைவர் சயான், மனோஜ் ஆகியோரை துவாரகா பகுதியில்  உள்ள தனியார் தங்கும் விடுதியில் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர், அவர்களை இரவோடு இரவாக சென்னை அளித்த வந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4. 50 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் இருவரையும் எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ‘‘எங்களுக்கு முதல்வர் எடப்பாடியை தெரியாது.

ஆனால், எடப்பாடியுடன் இருக்கும் படத்தை கனகராஜ் காட்டியதாகவும், அவருடன் நெருங்கிய சொந்தக்காரர் என்று கூறியதால்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டோம். நாங்கள் கொலை செய்ய வேண்டும் என்று இதில் ஈடுபடவில்லை.

ஆனால் கட்டிப்போட்டதில் அவர் இறந்து விட்டார். நாங்கள் பணத்தை எடுக்கவில்லை.

கனகராஜ் ஆவணங்களை எடுத்தார். அது குறித்து கேட்டபோது அதைப் பற்றி தெரியாது.

ஆளும்கட்சி பிரமுகர் எடுத்து வரச் சொன்னதால் எடுத்துச் செல்வதாக கூறினார். ஆனால் கனகராஜ் மற்றும் நான் குறி வைக்கப்பட்டதால் பயந்து விட்டேன்.

அவரும் இறந்து விட்டார். என்னுடைய மனைவி, மகள் இறந்து விட்டனர்.

கனகராஜ் சொன்னபடி ₹5 கோடியை என்னிடம் வழங்கவில்லை என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். ஆனால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், உங்களை இயக்குவது யார்? மேலும், யார் சொல்லி இந்த பேட்டியை கொடுத்தீர்கள்.

உங்களை தூண்டியது யார் என்று தொடர்ந்து தங்கள் பாணியில் விசாரித்து வந்தனர். ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

10 மணி நேரம் நடந்த விசாரணையின் முடிவில் இருவரையும் விடுமுறை கால எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சரிதா முன்னிலையில் மாலை 5 மணிக்கு ஆஜர்படுத்தினர்.

அப்போது, அவர் போலீசாரிடம், வழக்கு பதிவு செய்துள்ள 153(ஏ), 505(1)(ஏ)(பி), 505(2) ஆகிய பிரிவுகளின்படி, அவர்களது பேட்டியால் எங்கு கலவரம் ஏற்பட்டது. அரசுக்கு என்ன பிரச்னை ஏற்பட்டது என்று கூறியுள்ளீர்கள்.

அதனால், முதல்வரிடம் விளக்கம் பெற்றீர்களா, அவர்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா என்று பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டார். அதற்கு போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் போலீசாரின் விளக்கத்தை மாஜிஸ்திரேட் சரிதா ஏற்கவில்லை. இருந்தும் போலீஸ் தரப்பில் தொடர்ந்து அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வாதம் இரவு 9. 50 மணி வரை அதாவது 4. 50 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. ஆனால் மாஜிஸ்திரேட் கேட்ட விளக்கத்தை போலீசாரால் தீர்த்து வைக்க முடியவில்லை.

மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் சார்பாக ஆஜராக வக்கீல்களும் இல்லை. இதனால், இருவரையும் காவல் நீடிப்பு செய்ய முடியாது என்று மாஜிஸ்திரேட் மறுத்து விட்டடார்.

இதனால் இரவு 9. 50 மணிக்கு, இருவரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் இருந்து, எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். பின்னர், மீண்டும் 11. 30 மணியளவில் சைதாப்பேட்டையில் உள்ள மாஜிஸ்திரேட் சரிதா வீட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போதும், போலீசார் அதே அறிக்கையை தாக்கல் செய்தனர். இதை பார்த்த மாஜிஸ்திரேட் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

ஆனால், போலீஸ் தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. இதனால், சயான் மற்றும் மனோஜை ஆகிய இருவரையும் மாஜிஸ்திரேட் விடுவித்தார்.

வருகிற 18ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் வக்கீல்களுடன் ஆஜராக வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் ரூ. 10 ஆயிரத்துக்கு சொந்த ஜாமீனில் விடுவிக்கிறேன் என்று கூறினார்.

இதையடுத்து, வெளியே வந்த அவர்கள் அதிகாலை 3 மணியளவில் சொந்த ஊரான கேரளாவுக்கு புறப்பட்டு சென்றனர். பொய் வழக்குகளும்.

விடுவிப்பும். தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு ெதாடர் போராட்டங்கள் நடத்தி வந்த திருமுருகன் காந்தியை ராயப்பேட்டை போலீசார் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது அவர் மீது போடப்பட்ட வழக்கிற்கும், போலீசார் அவரை கைது செய்தற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனக்கூறி திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் மறுப்பு தெரிவித்தார்.
நடிகர் கருணாஸ் வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை உயர்அதிகாரியை மிரட்டியதாக நுங்கம்பாக்கம்  போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர் மீது போடப்பட்ட சட்டப்பிரிவுக்கும், கைது செய்ததற்கும் சம்பந்தம் இல்லை எனக்கூறி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.   தமிழக கவர்னர் குறித்து செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபாலை ஜாம்பஜார் போலீசார் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது அவர் மீது போடப்பட்ட சட்டப்பிரிவுக்கும், கைது செய்ததற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

மேலும், காவல்துறை அதிகாரிகளை கண்டித்து டிஜிபி அலுவலகம் முன்பு சீருடையில் ஆயுதப்படை காவலர்கள் 2 பேர் தீக்குளிக்க முயன்றனர்.

அவர்களை கைது செய்த மெரினா போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவர்கள் மீது போடப்பட்ட சட்டப்பிரிவுக்கும், கைது செய்ததற்கும் சம்பந்தம் இல்லை எனக்கூறி விடுவிக்கப்பட்டனர்.

தற்போது கொடநாடு வழக்கில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் ஆகிய இருவர் மீது போடப்பட்ட சட்டப்பிரிவுக்கும், கைதுக்கும் எந்த சம்பந்தம் இல்லை எனக்கூறி சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் மறுப்பு தெரிவித்துள்ளார்.   தொடர்ந்து 5 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போடப்பட்ட சட்டப்பிரிவுக்கும், கைதுக்கும் சம்பந்தம் இல்லை எனக்கூறி மாஜிஸ்திரேட்டுகளால் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் போலீசாருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர். மேலும் போலீசார் போடும் பொய் வழக்குகளை, நீதிபதிகள் ஏற்க மறுத்து, கண்டிப்புடன் நடந்து கொள்வது பெரிய அளவில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, பொதுமக்கள் மத்தியில் நீதித்துறை மீது மிகப்பெரிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.



சென்னை போலீஸ் மீது டெல்லியில் வழக்கு

சட்டத்துக்கு புறம்பாக சயான், மனோஜை கைது செய்ததாக தமிழக காவல்துறை மீது டெல்லி ஐகோர்ட்டில் தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முடிந்தால் எடப்பாடி நிரூபிக்கட்டும்

சயான், மனோஜை சிறையில் அடைக்க மறுத்து மாஜிஸ்திரேட் விடுதலை செய்யப்பட்டது குறித்து மேத்யூ கூறுகையில், ‘‘என்ன எப்ப வேண்டுமானாலும் வந்து கைது செய்யட்டும்.

சயான், மனோஜை சட்டத்துக்கு புறம்பாக கைது செய்துள்ளார்கள். ஏற்கனவே உள்ள வழக்குகளில் தவறாமல் நீலகிரி கோர்ட்டில் ஆஜராகி வருகின்றனர்.

அவர்கள் மீது எந்த தப்பும் இல்லை. கைது செய்ததில் எந்த முகாந்திரமும் இல்லாததால் கோர்ட்டில் விடுதலையாகி உள்ளனர்.

முடிந்தால் எடப்பாடி கொலை குற்றவாளி இல்லையென்று நிரூபிக்கட்டும்.   இவ்வாறு அவர் தெரிவித்தார்.

.

மூலக்கதை