உத்தரபிரதேச மாநில பிரயாக்ராஜ் நகரில் கோலாகலமாக துவங்கியது கும்பமேளா : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உத்தரபிரதேச மாநில பிரயாக்ராஜ் நகரில் கோலாகலமாக துவங்கியது கும்பமேளா : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

அலகாபாத் : உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், கோலாகலமாக கும்பமேளா துவங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தியாவில், ஹரித்துவார், பிரயாக்ராஜ் (அலகாபாத்), உஜ்ஜயினி, நாசிக் ஆகிய நகரங்களில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2007ம் ஆண்டுக்குப் பின் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், மகர சங்கராந்தி நாளில் அதிகாலையிலேயே கும்பமேளா தொடங்கியது.

இதையொட்டி, கங்கையாற்றுடன் யமுனையாறு கலக்குமிடமான திரிவேணி சங்கமத்தில் 35 படித்துறைகளில் துறவிகளும் பொதுமக்களும் புனித நீராடி வருகின்றனர். பல்வேறு மடங்களின் தலைவர்கள் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளில் மேள தாளங்களுடன் வந்து புனித நீராடினர்.

தொடர்ந்து 49 நாட்கள் நடைபெறும் இந்த கும்பமேளா விழாவில் நாடு முழுவதிலும் இருந்து 12 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சிக்காக மாநில அரசு 4,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. பக்தர்களுக்காக 250 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலைகளுடனும் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கங்கையாற்றங்கரையில் ‘கும்ப்நகரி’ என்ற தற்காலிக நகரம் உருவாக்கப்பட்டது.

மேலும் 32,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட இந்த தற்காலிக நகரத்தில் மருத்துவமனைகள், வங்கிகள், காவல் நிலையங்கள், கடை தெருக்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.   இதில், 15 மாநில அரசுத் துறைகள், 28 மத்திய அரசுத் துறைகள் மற்றும் 6 மத்திய அமைச்சகத் துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் மற்றும் சாதுக்களை கும்பமேளாவிற்கு வரவேற்கும் விதமாக ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன.

இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து செல்வார்கள் என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

.

மூலக்கதை