மேகதாது அணைக்கு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதித்த விவகாரம் தமிழக அரசின் மனுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மேகதாது அணைக்கு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதித்த விவகாரம் தமிழக அரசின் மனுவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு

* அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்ய கோரிக்கை
* கர்நாடக மாநில அரசும் உச்சநீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதித்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்ய மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதேபோல், கர்நாடகா அரசும் தமிழக அரசின் அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மனுதாக்கல் செய்துள்ளது.

இவ்வழக்கு, விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்ட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு உதவும் வகையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து, சமீபத்தில் காவிரி குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எதிராக தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மேகதாது அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதிக்குத் தடை விதிக்கக்கோரி தமிழக அரசு கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதியும், புதுச்சேரி அரசு டிசம்பர் 8ம் தேதியும் உச்சநீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தன.



அதை தொடர்ந்து மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் கடந்த டிசம்பர் 5ம் தேதி தொடுத்தது. தமிழகம், புதுச்சேரி அரசுகள் தாக்கல் செய்த மனுக்களில், ‘மேகதாது அணை, குடிநீர்த் திட்டம் ஆகியவை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசின் காவிரி நீர்வாரி நிகம் நிறுவனத்துக்கு மத்திய நீர் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி அளித்துள்ள அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும்.

மேலும், அனுமதி தொடர்பான கடிதத்தை மத்திய நீர் ஆணையம் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்நிலையில், மேற்கண்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ. எம். கான்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வில் டிசம்பர் 12ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘மேகதாது விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அளித்துள்ள அனுமதிக்குத் தடை விதிக்க முடியாது’ என, உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், தமிழக அரசின் மனுக்களுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, கர்நாடக அரசு சார்பில் கடந்த 4ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘தமிழக அரசின் அவமதிப்பு மனு சட்டப்படி செல்லதக்கதல்ல; அதில் எந்தவித முகாந்திரமும் இல்லை. எனவே, அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையே, மத்திய அரசின் சார்பில், உச்சநீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘கர்நாடக அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்க மத்திய அரசு நிபந்தனையின் அடிப்படையில் அனுமதி அளித்தது.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் அடிப்படையற்றவை. எனவே, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேலும், அபராதம் விதிக்கலாம். கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் கர்நாடகா அரசு ஆகியன பதில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளதால், வரும் சில நாட்களில் உச்சநீதிமன்ற அமர்வு முன், தமிழக அரசின் அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.


.

மூலக்கதை