சர்வதேச வேட்டி தினம்: புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் அனைவரும் வேட்டி அணிந்து வந்தனர்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சர்வதேச வேட்டி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் அஸ்வினிகுமார் தலைமையில்  அதிகாரிகள் அனைவரும் வேட்டி அணிந்து பணிக்கு வந்தனர்.

வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையாகக் கருதப்படுகிறது. தற்போது நாகரீக வளர்ச்சியில் பலர் வேட்டி கட்டுவதையே மறக்கின்ற நிலை உருவாகி விட்டது. இந்த நிலையில் தான் சர்வதேச வேட்டி தினம் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச வேட்டி தினத்தையொட்டி புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அனைவரும், செவ்வாய்க்கிழமை வேட்டி அணிந்து வந்தனர். 

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகள் பலரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

தலைமைச்செயலர் அஸ்வினி குமார் கூறும் போது,  "வேட்டி அணிவதை பெருமையாகக் கொள்ள வேண்டும். அனைவரும் வாரத்தில் ஒருநாளாவது வேட்டி அணிய வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

இதர செயலர்கள் கூறும் போது, "ஆண்டு முழுவதும் வேட்டி கட்டலாம். இதனால் பாரம்பரியம் காக்கப்படுவதுடன், நலியும் நெசவுத்தொழில் பாதுகாக்கப்படும். அனைவரும் வேட்டி கட்டுங்கள்" என்றனர்.

மூலக்கதை