அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் சமையல் கியாஸ் இணைப்பு- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

கியாஸ் இணைப்பு இல்லாத அனைத்து ஏழை குடும்பங்களுக்கும், சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் வகையில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

வறுமைக் கோட்டுக்கு கீழ் நிலையில் உள்ள குடும்பங்களின் பெண் உறுப்பினர்களுக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்க பிரதமரின் உஜ்வாலா திட்டம் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

இந்த நிலையில் இத்திட்டத்தை நீட்டித்து, கியாஸ் இணைப்பு இல்லாத அனைத்து ஏழை குடும்பங்களுக்குள் கியாஸ் இணைப்பு வழங்க பொருளாதார விவகாரங்களுக்காக மத்திய அமைச்சரவை அனுமதி அளித்ததாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார். 

இதன் மூலம் நாட்டில் 100 சதவீத வீடுகளில் எல்பிஜி கியாஸ் இணைப்பு இருக்கும். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு இணைப்புக்கும், அரசு ரூ. 1.600 மானியம் வழங்கும். இந்த மானியத் தொகை கியாஸ் இணைப்பு வழங்கும் அரசின் சில்லறை விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்படும். 

பாதுகாப்பு டெபாசிட், சிலிண்டர் கட்டணம், பொருத்துதல் கட்டணம் ஆகியவற்றுக்காக இந்த மானியம் வழங்கப்படுகிறது. 

இத்திட்டத்தின் பயனாளிகள் கியாஸ் அடுப்பை மட்டும் வாங்க வேண்டும். இந்த சுமையையும் குறைக்கும் வகையில் அடுப்பு மற்றும் முதல் மாற்று சிலிண்டருக்கான விலையை பயனாளிகள் மாத தவணை முறையில் செலுத்த இத்திட்டம் அனுமதிக்கிறது. அதன்பின் பெறப்படும் மாற்றுச் சிலிண்டர்களுக்கான செலவை பயனாளிகளே ஏற்க வேண்டும். 

முதலில் இத்திட்டம் 2011ம் ஆண்டு சமூக பொருளாதார அடிப்படையிலான ஜாதி கணக்கெடுப்பின்படி  வழங்கப்பட்டது. பின்னர் இந்த பட்டியல் எஸ்.சி/எஸ்.டி பிரிவினரின் வீடுகள், வனப்பகுதியில் வசிப்போர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தீவுகளில் வசிப்பவர்கள், பழங்குடியினர், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் என விரிவுபடுத்தப்பட்டது. 

தற்போது,  கியாஸ் இணைப்பு இல்லாத அனைத்து ஏழைகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. ஆதார் இணைப்பு: மொபைல் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்-ஐ சேர்க்கும் சட்டத்தில் திருத்தம் செய்யவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்தது. 

மூலக்கதை