நிர்பயா பலாத்கார வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உடனே நிறைவேற்ற உத்தரவிட முடியாது: மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
நிர்பயா பலாத்கார வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உடனே நிறைவேற்ற உத்தரவிட முடியாது: மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: நிர்பயா பலாத்கார வழக்கு குற்றவாளிகள் நால்வருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உடனே நிறைவேற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  டெல்லியில் 23 வயது மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா,  கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி இரவு, 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். அதன்பின் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அதே ஆண்டு டிசம்பர் 29ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்த பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளில், ராம்சிங் என்பவன் திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். மற்றொருவன் சிறுவன் என்பதால் சிறார் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு  3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், சிறுவன் என்பதால் தண்டனை காலம் முடிந்ததும் திருந்தி வாழும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.    மற்ற நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.  இதையடுத்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில், முகேஷ்(31), பவன் குப்தா(24) மற்றும் வினய் சர்மா(25) மூவரும் தண்டனையை எதிர்த்து கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல்  செய்தனர். நான்காவது குற்றவாளியான அக்‌ஷய் குமார்(33) சீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை. இந்த மூவரின் சீராய்வு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் தண்டனையை குறைக்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து கடந்த ஜூலை 9ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், அலோக் வத்சவா என்கிற வக்கீல் பொது நல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரையும் உடனடியாக தூக்கிலிட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர் மற்றும் தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, “என்ன மாதிரியான கோரிக்கையை இங்கு முன் வைக்கிறீர்கள்? நீதிமன்றத்தை கேலி கூத்தாக்கும் முயற்சியை செய்து கொண்டிருக்கிறீர்கள்” எனக் கூறி மனுவை தாக்கல் செய்த வக்கீலுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மூலக்கதை