தனிப்பட்ட தாக்குதலில் நம்பிக்கை இல்லை: அருண் ஜெட்லி

தினமலர்  தினமலர்
தனிப்பட்ட தாக்குதலில் நம்பிக்கை இல்லை: அருண் ஜெட்லி

புதுடில்லி : நேரு, இந்திரா, ப.சிதம்பரம் காலத்தில், பல ரிசர்வ் வங்கி கவர்னர்களை பதவி விலக சொன்னார்கள் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியிலிருந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்தார். இதனையடுத்து புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் உர்ஜித் ராஜினாமா குறித்தும், 3 மாநில தேர்தல் தோல்வி குறித்தும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நிறைய சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நகரங்களில் வசிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் கிராமப்புற மக்களுக்கும், ஏழைகளுக்கும் உதவும் வகையில் அத்திட்டங்கள் உள்ளன. நாட்டில் வங்கி கடன் எளிமையாக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் சாலை வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டுக்குள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. நாட்டில் 97 சதவீத மக்களின் வீடுகளுக்கு மின்சாரம் சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச 2003ல் ஏழ்மை மாநிலமாக இருந்தது. விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை. மின்சாரம் இல்லை. சாலை வசதிகள் மோசமாக இருந்தது. 15 ஆண்டுகளுக்கு பிறகு ஏழ்மை மாநிலத்திலிருந்து மாறியுள்ளது. தற்போது வளர்ச்சி பெறும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. மின்சாரம், தண்ணீர் வசதி செய்து கொடுத்துள்ளோம். அங்கு தோல்வியடைந்த போதும், காங்கிரசை விட கூடுதல் ஓட்டு வாங்கியுள்ளோம்

நாட்டிற்கு ரிசர்வ் வங்கி மிகவும் முக்கியமானது. அதன் தன்னாட்சியானது, சட்டத்தில் வரைமுறை செய்யப்பட்டுள்ளது. ஏராளமான சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், கிராமப்புற இந்தியா மற்றும் ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர். நேரு, இந்திரா, சிதம்பரம் காலத்தில், பல ரிசர்வ் வங்கி கவர்னர்களை பதவி விலக சொன்னார்கள். நான் இரண்டு கவர்னர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளேன். அவர்களது ஒத்த கருத்து ஏற்படாவிட்டாலும், உறவு சிறப்பானதாக இருந்தது.

ராகுலும், அவரது ஆதரவாளர்களும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் மோடியின் தாயார், தந்தை மற்றும் எனது குழந்தைகளை கூட விடவில்லை. தனிப்பட்ட தாக்குதலில் நம்பிக்கை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை