நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு நாள் இன்று அனுசரிப்பு: உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி

தினகரன்  தினகரன்
நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு நாள் இன்று அனுசரிப்பு: உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி

டெல்லி: நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அப்போது வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது. 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 5 தீவிரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் புகுந்து தாக்குதல் தொடுத்தனர். இதில் டெல்லி காவல்துறையை சேர்ந்த 6 பேர், நாடாளுமன்ற பாதுகாப்பில் இருந்த 2 வீரர்கள், ஒரு தோட்டக்காரர் என 9 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். நாடாளுமன்ற தாக்குதல் தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில் தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த 9 பேரின் உருவப்படங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதனிடையே 2001ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தை காக்கும் பொறுப்பில் உயிரிழந்தவர்களின் நினைவை நாடு போற்றுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஜனநாயகத்தை குறி வைத்து தாக்குதல் நடத்திய வெறுப்பும் பயங்கரமும் நிறைந்த சக்திகள் வெற்றி பெற முடியவில்லை என்றும் அவர்கள் ஒரு போதும் வெற்றி பெற முடியாது என்றும் குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற தாக்குதலின் போது உயிர்த்தியாகம் செய்தவர்களின் வீரத்திற்கு வீரவணக்கம் செய்வதாக பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவர்களது துணிச்சலும் வீரமும் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கம் அளிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை