மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்

தினகரன்  தினகரன்
மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்

டெல்லி: மேகதாது அணை  தொடர்பான திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் மேகதாது ஆய்வறிக்கைக்கு தடைவிதிக்க தமிழக அரசு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னதாக மேகதாது அணை தொடர்பான கர்நாடகாவின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலுக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதே போன்று அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசு நீதிமன்றத்தை அவமதிக்கிறது எனவும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு தலைமை நீதிபதியிடம் தமிழக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், மேகதாது அணை தொடர்பான தமிழக அரசின் மனுவை இன்று அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்றது. அதன்படி இன்று வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கூறியதாவது: மேகதாது அணை திட்ட ஆய்வறிக்கை தயாரிக்க அளித்த அனுமதிக்கு தடையில்லை. மேகதாது அணை தொடர்பாக விரிவான அறிக்கை தானே தயாரிக்கிறார்கள். மேகதாது அணை கட்டுவதற்கு முன் உச்சநீதிமன்ற அனுமதியை பெற வேண்டும். மேலும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக 4 வாரத்தில் கர்நாடக அரசும், மத்திய அரசும் பதிலளிக்க கோரி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மூலக்கதை