ராகுல் குற்றச்சாட்டு விவசாயிகளை சுமையாகவே மத்திய பாஜ அரசு கருதுகிறது

தினகரன்  தினகரன்
ராகுல் குற்றச்சாட்டு விவசாயிகளை சுமையாகவே மத்திய பாஜ அரசு கருதுகிறது

மொகாலி: ‘‘விவசாயிகள் கடன் தள்ளுபடி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவற்றை பாஜ அரசு சுமையாகவே கருதுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இப்பிரச்னைகள் தீர்க்கப்படும்’’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.அசோசியேட் ஜெர்னல் நிறுவனம், ‘நவஜீவன்’ இந்தி மொழி பத்திரிகையை மறுவெளியீடு செய்வதன் தொடக்க விழா டெல்லியில் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்னை வேலைவாய்ப்பு மற்றும் விவசாயிகள் கடன் தள்ளுபடிதான். இப்பிரச்னைகளால் நாட்டு மக்கள் மத்தியில் கோபம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர மத்திய பாஜ அரசால் முடியவில்லை. இது மோடி முன் உள்ள முக்கிய சவாலாகி இருக்கிறது.21ம் நூற்றாண்டோ, 22ம் நூற்றாண்டோ, எதுவாக இருந்தாலும் விவசாயிகள் இல்லாமல் நாடு முன்னேற முடியாது. உணவு பாதுகாப்பு, விவசாயிகளுக்கு பாதுகாப்பான எதிர்க்காலம் அமையாமல் நாடு வளர்ச்சி காண முடியாது. இவற்றை மத்திய பாஜ அரசு சுமையாகவே கருதி வருகிறது.மாநிலங்களிலும், மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி அமைத்து 21ம் நூற்றாண்டுக்கான யுக்திகளுடன் இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம். இதை எங்களால் எளிதாக செய்ய முடியும். காரணம், நாங்கள் மக்களின் குரலை காது கொடுத்து கேட்போம். இன்று நாட்டில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களும் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன. அத்தகைய நிறுவனங்களை காப்பாற்ற காங்கிரஸ் போராடுகிறது. அதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை