மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாகா ராஜினாமா : பீகாரில் உடைந்தது பாஜ கூட்டணி

தினகரன்  தினகரன்
மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாகா ராஜினாமா : பீகாரில் உடைந்தது பாஜ கூட்டணி

புதுடெல்லி : பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாகா நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணையலாம் என கூறப்படுகிறது. தே.ஜ கூட்டணியில் பீகாரின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி (ஆர்எல்எஸ்பி) இணைத்திருந்தது. அக்கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாகா மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையில் இணை அமைச்சராக இருந்தார். பீகாரில் மொத்தம் 40 எம்.பி தொகுதிகள் உள்ளன. வரும் மக்களவை தேர்தல், தொகுதி பங்கீடு தொடர்பாக தே.ஜ. கூட்டணியில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஆர்எல்எஸ்பி கட்சிக்கு 2 தொகுதிக்கு மேல் ஒதுக்க முடியாது என சூசகமாக தெரிவிக்கப்பட்டது. இதனால் குஷ்வாகா தே.ஜ கூட்டணியிலிருந்து விலக முடிவு செய்தார். இந்நிலையில், அவர் நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், ‘‘பிரதமர் மோடியின் தலைமையால் நான் வஞ்சிக்கப்பட்டு கடும் சோர்வுற்றுள்ளேன். அரசு ஏழைகள் மற்றும் சமூகத்தின் ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காக பாடுபடவில்லை. மாறாக எதிர்க்கட்சிகளை ஒடுக்கத்தான் செயலாற்றி வருகிறது. இதனால் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்’’ என்று கூறியுள்ளார். எதிர்க்கட்சியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணியில் அவர் இணையலாம் என கூறப்படுகிறது. தே.ஜ கூட்டணியிலிருந்து ஆர்எல்எஸ்பி விலகியுள்ளதால், பீகாரில் பா.ஜ.வும், ஐக்கிய ஜனதா தளமும் தொகுதிகளை சரிசமமாக பிரித்துக் கொள்ளும் எனத் தெரிகிறது.குஷ்வாகா காங்கிரஸ் கூட்டணியில் இணையும் பட்சத்தில், அக்கூட்டணிக்கு பெரும் பலம் சேரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து குஷ்வாகா அளித்த பேட்டியில், ‘‘பாஜ கூட்டணியில் இருந்து விலகிய பின்னர் அடுத்த வாய்ப்பு குறித்து உடனடியாக கூற முடியாது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் உள்ளன’’ என்று சூசகமாக எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இணையப்போவதை தெரிவித்தார்.

மூலக்கதை