இனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறலாம்- மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

இனி விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறலாம் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய மத்திய நேரடி வரிகள் வாரியம் தலைவர் சுஷில் சந்திரா கூறியதாவது:

வரி செலுத்தும் முறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. வரி செலுத்தும் முறை எளிமையாக்கப்பட உள்ளது. விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் பான் கார்டு பெறும் வசதி இந்த ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளது. தொழில் துவங்குவோருக்கும், வருமான வரி செலுத்துவோருக்கும் ஏதுவாக வரி செலுத்தும் முறைகள் எளிமையாக்கப்பட உள்ளன.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 50 சதவீதம், அதாவது 6.08 கோடியாக அதிகரித்து உள்ளது. அமலாக்கப் பிரிவு வரி விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும். வெளிநாடுகளில் சொத்துக்கள் வைத்திருப்போர் அல்லது வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருந்போர் வருமான வரி கணக்கு தாக்கலின் போது அது தொடர்பான விபரம் அளிக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய நேரடி வரிகள் வாரியம் வருமான வரி விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இதன்படி, ஒரு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் அல்லது அதற்கு மேல் பண பரிவர்த்தனை செய்ய பான் கார்டு அவசியம் ஆக்கப்பட்டு உள்ளது. 

பான் கார்டு விண்ணப்பிக்க தாய் மட்டும் கொண்டவராக இருந்தால் விண்ணப்ப படிவத்தில் தந்தை பெயர் குறிப்பிட வேண்டியது கட்டாயம் இல்லை. ரூ.5 லட்சத்திற்கு கீழ் மொத்த விற்பனை அல்லது விற்றுமுதல் அல்லது மொத்த வருவாய் கொண்டவர்களுக்கு பான் கார்டு விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை