நவீன ஆயுதங்களுடன் சீனா படைகள் குவிப்பு: இந்திய எல்லையில் போர் பதற்றம் அதிகரிப்பு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: இந்திய எல்லையில் அதிநவீன ஆயுதங்களுடன் சீனா படைகளை குவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. டோக்லாம் பிரச்னை காரணமாக கடந்த ஆண்டில் இந்தியா சீனா இடையே பதற்றம் ஏற்பட்டது. பேச்சுவாா–்த்தை மூலம் அப்பிரச்னை முடிவுக்கு வந்தது. இதற்கிடையே கடந்த டிசம்பர் இறுதியில் அருணாச்சல பிரதேசத்தில் சீனப்படைகள் மக்களோடு மக்களாக ஊடுருவியது புதிய விரிசலுக்கு வித்திட்டது. அந்த பதற்றங்கள் சற்று தணிந்த நிலையில் தற்போது சீன வீரர்கள் இந்திய எல்லை அருகே அதி நவீன ஆயுதங்களுடன் முகாமிட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நவீன தொழில்நுட்பத்திலான எலக்ட்ரானிக் ஆயுதங்கள் ஒவ்வொரு சீன வீரருக்கும் அளிக்கப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வகை ஆயுதங்கள் எதிரிகளின் மறைவிடத்தை கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டது. இது வரை அமெரிக்கா ராணுவம் மட்டுமே இதுபோன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்தது. தற்போது சீன ராணுவமும் இந்த ஆயுதங்களை தனது ராணுவத்தில் இணைத்துள்ளது. இந்தியாவை அச்சுறுத்தும் நோக்கில் அதனை எல்லைக்கு கொண்டுவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய எல்லையை ஒட்டிய திபெத் பகுதியில் சீன ராணுவம் போர் பயிற்சி மேற்கொண்டது. அதுபோன்று இந்திய பெருங்கடலில் ஜிபோட்டி பிராந்தியத்தில் அந்நாட்டு கடற்படையினர் போர் பயிற்சி எடுத்தனர். சீனாவின் இந்த செயல்கள் எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

மூலக்கதை