மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் பக்தர்களுக்கு 2 வேளை உணவு

தினகரன்  தினகரன்

மைசூரு: மைசூருவில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். காலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தாசோஹ பவனில் மதியம் ஒரு வேளை மட்டுமே உணவு வழங்கப்பட்டு வந்தது. தற்போது பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் மாலை நேரத்திலும் உணவு வழங்க மாவட்ட கலெக்டர் ரணதீப் உத்தரவிட்டுள்ளார். சாமுண்டி மலைக்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூரிலிருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு இளைப்பாறுவதற்கு வசதியாக மாலை நேரத்திலும் உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி காலை 7.30 மணி முதல் 10 மணி வரை விதவிதமான காலை உணவு வழங்கப்பட உள்ளது. மாலை 7.30 மணி முதல் 9 மணி வரையில் இரவு உணவு வழங்கப்படும். வருகிற மார்ச். 1ம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. மேலும் கோயிலில் அர்ச்சகர்கள் 2 மங்கள ஆரத்தி தட்டுக்கு பதில் ஒரு தட்டு வைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதுவரை கோயிலில் 2 அல்லது 3 மங்கள ஆரத்தி தட்டுகள் வைத்திருந்தனர். விசேஷ நாட்களில் கூட்டம் அதிகமாக வருவதால் 3 ஆரத்தி தட்டுகள் வைத்து ஆரத்தி எடுத்து வந்தனர். அதில் வரும் பக்தர்களின் காணிக்கையை கோயில் குருக்களே எடுத்துக் கொள்வதாக கோயில் நிர்வாகத்தினர் மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து ஒரே தட்டு வைக்குமாறு மாவட்ட கலெக்டர் ரணதீப் உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை