அரசியல் பயணத்தை கலாம் நினைவிடத்தில் இருந்து கமல்ஹாசன் தொடங்கக் கூடாது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

PARIS TAMIL  PARIS TAMIL
அரசியல் பயணத்தை கலாம் நினைவிடத்தில் இருந்து கமல்ஹாசன் தொடங்கக் கூடாது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து அரசியல் பயணத்தை நடிகர் கமல்ஹாசன் தொடங்கக் கூடாது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:–

நடிகர் கமல்ஹாசன் புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கிறார். அரசியல் அடி எடுத்து வைக்கும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். ராமேசுவரத்தில் இருந்து அவர் தன் பயணத்தை தொடங்குவது மிகுந்த மகிழ்ச்சி.

அதே சமயம் அவருக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்க வேண்டாம். அப்துல் கலாம் நினைவிடம் அரசியலுக்கு அப்பாற்பட்டு தேசிய அடையாளமாக விளங்கும் இடம். நாட்டு மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் நாம் சிலரையாவது விட்டு வைக்க வேண்டும். அதில் முதலில் இருப்பவர் அப்துல் கலாம்.

கமல்ஹாசன் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். நான் மத்திய மந்திரியாக இருப்பதால் என்னை சந்திக்க வேண்டாம் என்று அவர் நினைத்து இருக்கலாம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு முன்பே தமிழகத்தில் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். வெளிப்படையாக தங்களால் இயங்க முடியும் என்று அந்த சந்தப்பத்தை பயன்படுத்தி கொண்டனர். கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தது. தமிழகத்தில் அதுபோன்ற தாக்குதல்கள் இல்லை என்பதற்காக பயங்கரவாதிகள் செயல்பாடு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழகத்தில் பல இடங்களை பயிற்சி மையமாக வைத்து பயங்கரவாத பயிற்சிகள் நடந்து வருகிறது. பயங்கரவாதிகள் தங்களின் செயல்பாட்டை மாற்றி இருக்கிறார்கள். இதை கண்டு அரசு ஏமாறக்கூடாது. இவற்றை நிரூபிக்க நாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும். மத்திய அரசு கட்டாயமாக இதை கவனித்து கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

மூலக்கதை