தங்கப்பதக்கம் வாங்கியும் பலனில்லை, பணம் தான் பலமா?

தினமலர்  தினமலர்
தங்கப்பதக்கம் வாங்கியும் பலனில்லை, பணம் தான் பலமா?

உயர் கல்வியில், 'கோல்டு மெடல்' பெற்று, முழு தகுதியுடன் இருந்த பலர், பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தும், அவர்களை தேர்வு செய்யாமல் தவிர்த்திருப்பது, கோவை பாரதியார் பல்கலையில், பணத்தின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் நடந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர், கணபதி கைது செய்யப்பட்டதையடுத்து, இப்பல்கலையில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நியமனத்தில் நடந்துள்ள ஊழல் மற்றும் முறைகேடுகள், ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன.

உரிமைச்சட்டம்

குறிப்பாக, பல்கலை மானியக்குழுவின், 12வது திட்டத்தில், இந்த நியமனங்களைச் செய்திருப்பதில், எக்கச்சக்கமான விதிமீறல்கள் நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.ஏற்கனவே, பகுதி நேர பிஎச்.டி., படித்தவர்களை, முழு நேர பிஎச்.டி., படித்தவர்கள் என்று கூறி, நியமனம் செய்திருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கிடைத்த தகவலில் கண்டறியப்பட்டது. அடுத்தபடியாக, பணியிடங்கள் காலியாக இல்லை என்பதை மறைத்து, பல்கலை மானியக்குழுவின் விதிகளையும் மீறி, நிரந்தரப் பணியிடங்களில், பலரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்காக, சிண்டிகேட் கூட்டத்தில் துணைவேந்தரால், பொய்யான தகவலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விதிமீறல் அம்பலம்

கடந்த 2015 ஏப்., 30ல் நடந்த நிதிக்குழு கூட்டத்தில், '12வது திட்ட காலத்துக்கு மட்டுமே, ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். 'இதற்கு, முன்னணிப் பத்திரிகைகளில் விளம்பரம் தர வேண்டும்; இட ஒதுக்கீடு மற்றும் பல்கலை மானியக்குழு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்; ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, அதிகபட்சமாக, 32 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கலாம்' என்று தீர்மானிக்கப்பட்டது.அதே ஆண்டில், ஆக., 24ல் நடந்த சிண்டிகேட் கூட்டமும் இதற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால், இதன் பின், 2016 நவ., 11ல், துணைவேந்தர் அளித்த குறிப்பாணையின்படி, இதே, 12வது திட்டத்தில், மாதச்சம்பளம், 48 ஆயிரத்து, 600 ரூபாய் என்று நிர்ணயித்து, 13 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுவும், 12வது திட்டக்காலம் முடிவடையும் காலகட்டத்தில், இந்த நியமனங்கள் நடந்துள்ளன.

உண்மையில், பல்கலை மானியக்குழு விதிமுறையின்படி, உதவி பேராசிரியர்களுக்கு தொகுப்பூதியமாக, 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுஇருக்க வேண்டும். அதற்கு மாறாக, 32 ஆயிரம் ரூபாயாக உயர்த்திய பல்கலை நிர்வாகம், அதை, 48 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி, நிரந்தரப் பணியிடமாகவும் அதை மாற்றியுள்ளது. இது, அப்பட்டமான விதிமீறலாகக் கருதப்படுகிறது.

இவ்வாறு, விதிகளை மீறி நியமனம் செய்வதற்காக, பணியாளர் நலத்துறைக்கு துணைவேந்தரால் அனுப்பப்பட்ட சிறப்பு குறிப்பாணையில், துணைவேந்தர் கணபதி, தன் கைப்பட சில விஷயங்களை எழுதி கையெழுத்திட்டுள்ளார். அதில், '2016 நவ., 22ல் சிண்டிகேட் கூட்ட தீர்மானத்தின்படியே, நியமனம் நடந்துள்ளதாகவும், புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, நிரந்தரப் பணியாளருக்குரிய ஊதியத்தை உடனடியாக வழங்கலாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தகுதியானோர் நிராகரிப்பு

இவை எல்லாவற்றையும் விட, துணைவேந்தரால் நியமிக்கப்பட்டவர்களை விட, மிகவும் தகுதியான பலரும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தும், அவர்களை வேண்டுமென்றே புறக்கணித்திருப்பதும் உறுதியாகியுள்ளது. அதிலும், இளங்கலை மற்றும் முதுகலை அல்லது இரண்டிலும், 'கோல்டு மெடல்' பெற்றவர்கள் பலர், சம்பந்தப்பட்ட துறைகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த நிலையிலும், அவர்களில் யாரும் நியமிக்கப்படவில்லை.

இயற்பியல் துறையில், பெருமைக்குரிய விருதாகக்கருதப்படும், 'மீரா வைரப்பிரகாசம் கோல்டு மெடல்' பெற்ற பொன் பாண்டியன் என்பவர், 'நானோ டெக்னாலஜி' துறையில் பணியாற்றி வரும் நிலையிலும், பேராசிரியர் பணியிடத்துக்கு அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

சுற்றுச்சூழல் அறிவியல் துறையில், விருது வாங்கிய பல்கலை மாணவர்கள், ஐந்து பேர் விண்ணப்பித்தும், ஒருவர் கூட தேர்ந்தெடுக்கப்படாமல், வேறு துறைகளைச் சேர்ந்த மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

'

கோல்டு மெடல்'



தாழ்த்தப்பட்டோர்-3, பிற்படுத்தப்பட்டோர் -11, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 4, பொதுப்பிரிவினர் - 5 என, 23 பேர், தகுதியானவர்களாக இருந்தும், அவர்களை தேர்வு செய்யவில்லை. இவர்களில், 17 பேர், 'கோல்டு மெடல்' பெற்றவர்கள்; ஒருவர், இளம் விஞ்ஞானி விருது பெற்றவர்.

இதற்கு மாறாக, 'பயோ-இன்பர்மேட்டிக்ஸ்' துறையில், தொலைதூர கல்வி முறையில், முதுகலை படித்த பெண் ஒருவர், உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு, தகுதியானவர்களைப் புறக்கணித்து, தகுதியற்றோரை நியமித்ததே, இந்த நியமனங்களில் லஞ்சம் விளையாடியதை உறுதிப்படுத்தியுள்ளது.

பல்வேறு விதிகளையும் மீறி, பணத்துக்காக இந்த நியமனங்களைச் செய்ததோடு, அதற்கு தன் கைப்பட காரணங்களையும் எழுதி வைத்துள்ள துணைவேந்தர் கணபதி, சட்டத்தின் பிடியிலிருந்து எளிதில் தப்ப முடியாது என்பதே, பல்கலை வட்டாரத்தின் பலமான நம்பிக்கையாக உள்ளது
.-நமது நிருபர் -

மூலக்கதை