பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தில் இந்தியா-ஓமன் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து

PARIS TAMIL  PARIS TAMIL
பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்தில் இந்தியாஓமன் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஜோர்டான், பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட், ஓமன் நாடுகளுக்கு கடந்த 9-ந் தேதி பிரதமர் மோடி தனது அரசு முறை சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதலில் ஜோர்டான் சென்ற அவர் பின்னர் பாலஸ்தீன நாட்டுக்கு சென்றார். தனது பயணத்தின் நிறைவாக அவர் நேற்று முன்தினம் இரவு ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து ஓமன் நாட்டுக்கு சென்றார். தலைநகர் மஸ்கட்டில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மோடியின் தலைமையில் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக உயர் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றும் அவருடன் சென்றிருந்தது. நேற்று முன்தினம் இரவு மோடி ஓமன் மன்னர் காபூஸ் பின் சேட் அல் சேட்டை சந்தித்து பேசினார்.

அப்போது இருநாடுகள் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பாக வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, ராணுவம், பாதுகாப்பு, பிராந்திய விவகாரங்கள் போன்றவற்றில் ஒத்துழைத்து செயல்படுவது பற்றி இரு தலைவர்களும் விவாதித்தனர்.

8 ஒப்பந்தங்கள் கையெழுத்து

அப்போது, ஓமன் நாட்டின் வளர்ச்சிக்கு நேர்மையுடனும், கடினமாகவும் உழைக்கும் இந்தியர்களுக்கு மன்னர் காபூஸ் பாராட்டு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மோடி, காபூஸ் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே நீதித்துறை, தூதரக விசா விலக்கு, சுகாதாரம், சுற்றுலா, அமைதி, வெளிநாட்டு சேவை நிறுவனம், ராணுவ கல்வி மற்றும் ராணுவ ஒத்துழைப்பு ஆகிய 8 துறைகளில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதேபோல் ஓமன் துணை பிரதமர் சயீத் பின் மகமூத் அல் சயீத்தையும் மோடி நேற்று சந்தித்து பேசினார்.

முன்னதாக மஸ்கட் நகரில் இந்திய சமூகத்தினரையும் மோடி சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் சூழல் ஏற்ற இறக்கங்களுடன் இருந்தாலும், இந்தியாவும், ஓமனும் வலுவான உறவை கொண்டுள்ளன. இந்த உறவுக்கு பக்க பலமாக ஓமனில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் திகழ்கின்றனர். நமது இரு நாடுகளின் உறவும் பலநூற்றாண்டு பாரம்பரியத்தைக் கொண்டது என்று குறிப்பிட்டார்.

சிவன் கோவிலில் வழிபாடு

மஸ்கட் நகரின் மத்ராஹ் பகுதியில் அமைந்துள்ள 125 ஆண்டு பழமை வாய்ந்த சிவன் கோவிலுக்கு பிரதமர் மோடி நேற்று காலை சென்று வழிபட்டார். இந்த சிவன் கோவிலில் பெரிதும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்று இதுபற்றி தனது டுவிட்டர் பதிவில் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இந்த கோவிலில் மோடி அபிஷேகமும் நடத்தினார். கோவிலின் நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். பின்னர், மோடியுடன் கோவில் நிர்வாகிகள் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இந்த கோவில் 125 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் வர்த்தகர்களால் கட்டப்பட்டது ஆகும்.

தொழில் தொடங்க வாருங்கள்

இதைத்தொடர்ந்து மஸ்கட் நகரில் உள்ள ஓமன் நாட்டின் மிகப்பெரிய மசூதியான மன்னர் காபூஸ் மசூதிக்கும் சென்று மோடி பார்வையிட்டார்.

இந்தியாவில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக நேற்று மஸ்கட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திய-ஓமன் வர்த்தகர்கள் சந்திப்பிலும் அவர் கலந்து கொண்டார்.

இதில் பங்கேற்ற வளைகுடா நாடுகள் மற்றும் மேற்கு ஆசிய பிராந்திய நாடுகளின் தொழில் நிறுவன தலைவர்களிடையே மோடி பேசினார். அப்போது, “இந்தியாவில் அன்னிய முதலீட்டாளர்கள் பல்வேறு துறைகளிலும் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளோம். எனவே, இந்தியாவில் தொழில் தொடங்க நீங்கள் அனைவரும் முன்வர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

டெல்லி திரும்பினார்

ஓமன் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று மாலை டெல்லி திரும்பினார்.

மூலக்கதை