கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் உள்ள லாலுவுக்கு ஜாமீன் மறுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் உள்ள லாலுவுக்கு ஜாமீன் மறுப்பு

ராஞ்சி: கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்க ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், பீகார் மாநில முதல்வராக இருந்த காலகட்டத்தில், கால்நடை தீவனம் வாங்கியதில் ரூ. 900 கோடி அளவுக்கு முறைகேடு நடந்தது. பல்வேறு கருவூலங்களில் போலி ரசீது கொடுத்து கால்நடை தீவனத்துக்காக முறைகேடாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது.

இதில், லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பான வழக்குகள் ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முதல் வழக்கில், லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இவ்வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தார். மற்றொரு வழக்கில் மூன்றரை ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் லாலு பிரசாத் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி லாலுவுக்கு ஜாமீன் வழங்க மறுத்தார்.

இதுதொடர்பாக, சிபிஐ நீதிமன்றம் 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இவ்வழக்கு விசாரணை மார்ச் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. லாலுவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் 2 வழக்குகளில் விரைவில் தீர்ப்பு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை