சுவிட்சர்லாந்து செல்கிறார் பிரதமர் மோடி: பொருளாதார மாநாட்டில் நாளை மறுதினம் பங்கேற்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சுவிட்சர்லாந்து செல்கிறார் பிரதமர் மோடி: பொருளாதார மாநாட்டில் நாளை மறுதினம் பங்கேற்பு

புதுடெல்லி: சுவிட்சர்லாந்தில் நாளை மறுதினம் நடைபெறும் சர்வதேச அளவிலான பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். சர்வதேச பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நாளை மறுதினம் நடக்கிறது.

70 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இம்மாநாடு 5 நாட்கள் நடக்கிறது. 38 பன்னாட்டு நிறுவனங்களில் தலைவர்கள், உலக வர்த்தக அமைப்பு, உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் ஆகியவற்றின் தலைவர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
இம்மாநாட்டின் துவக்க நிகழ்ச்சி நாளை மறுதினம் நடைபெறுகிறது.

இதில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் டாவோஸ் செல்லும் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார்.

சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட் உள்ளிட்ட தலைவர்களை மோடி சந்தித்து பேசுகிறார்.

இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸியை, மோடி சந்தித்து பேச மாட்டார்.

நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்ட 6 அமைச்சர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். வருகிற 24ம் தேதியன்று மாநாட்டில் அருண் ஜெட்லி உரையாற்றுகிறார்.

சர்வதேச அளவில் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்பதால் இம்மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘நமது நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இது சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.   நமக்கான நல்ல வாய்ப்பாக இம்மாநாடு அமையும்.

125 கோடி மக்களின் குரலை மாநாட்டில் வெளிப்படுத்துவதுதான் எனது நோக்கம்’’ என்றார்.

.

மூலக்கதை