கவிஞர் வைரமுத்துவை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தொடங்கினார்

PARIS TAMIL  PARIS TAMIL
கவிஞர் வைரமுத்துவை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தொடங்கினார்

ஆண்டாள் நாச்சியாரை விமர்சித்த கவிஞர் வைரமுத்துவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள மணவாளமாமுனிகள் மடத்தின் 24-வது பட்டம் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும் போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார்.

ஆண்டாள் சன்னதிக்கு கவிஞர் வைரமுத்து வந்து மன்னிப்பு கேட்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவர் அறிவித்திருந்தார். அவர் அறிவித்திருந்த கெடு முடிவடைந்ததை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் அவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை நேற்று தொடங்கினார்.

நேற்று காலை ஆண்டாள் கோவில் எதிரே பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு உண்ணாவிரதம் தொடங்க வந்த ஜீயருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனை தொடர்ந்து கோவிலில் உள்ள மடத்தில் அவர் உண்ணாவிரதம் இருந்தார்.

ஆதரவு

அவருக்கு ஆதரவு தெரிவித்து வாசுதேவபட்டர், அரையர்சுவாமிகள், ரமேஷ்பட்டர், இந்துமுன்னணி தென் மாநில தலைவர் வன்னியராஜ் மற்றும் ராமகிருஷ்ணன், பஜ்ரங்தள் மாநில தலைவர் சரவண கார்த்திக் உள்பட பலர் உண்ணாவிரதம் இருந்தார்கள். பக்தர்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்தார்கள்.

முன்னதாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தார்கள். அனைவரையும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லுமாறு ஜீயர் கேட்டுக்கொண்டார். அனைவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

ஜீயர் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கி இருப்பதை தொடர்ந்து கோவில் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை