கூடுதல் செலவினங்களுக்காக ரூ.6,522 கோடி நிதி ஒதுக்கீடு முதல் துணை மதிப்பீட்டை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்

PARIS TAMIL  PARIS TAMIL
கூடுதல் செலவினங்களுக்காக ரூ.6,522 கோடி நிதி ஒதுக்கீடு முதல் துணை மதிப்பீட்டை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல்

தமிழக சட்டசபையில் நேற்று, 2017-2018-ம் ஆண்டு ஏற்பட்ட கூடுதல் செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு முதல் துணை மதிப்பீடுகளை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இத்துணை மதிப்பீடுகள், மொத்தம் ரூ.6,522.03 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன. 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ந் தேதி 2017-2018-ம் ஆண்டிற் கான வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு புதுப்பணிகள் மற்றும் புது துணைப் பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவதும், எதிர்பாராச் செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையினை அந்நிதிக்கு ஈடுசெய்வதும் இத்துணை மானியக் கோரிக்கையின் நோக்கமாகும்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கான ஓய்வுகாலப் பலன்கள், தற்போது பணியில் உள்ள பணியாளர்கள் தொடர்பான நிலுவைகள், வாகன விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு ஆகியவற்றை வழங்க வழிவகை செய்ய, அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழிவகை முன்பணமாக ரூ.2,519.25 கோடியை அரசு அனுமதித்துள்ளது.

அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 8,272 குடியிருப்புகளையும், ஒரு லட்சத்து 57 ஆயிரம் தனி வீடு களையும் கட்டுவதற்காக ரூ.588.12 கோடியை அரசு கூடுதலாக அனுமதித்துள்ளது. மத்திய அரசின் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.268.07 கோடியை கூடுதலாக அரசு அனுமதித்துள்ளது. பாக் வளைகுடாப் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க, சாதாரணப் படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளாக மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, அரசு ரூ.286 கோடியை அனுமதித்துள்ளது.

தேசிய வேளாண் காப்புறுதித் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்க, மாநில அரசின் பங்கான ரூ.177.86 கோடியை இந்த அரசு அனுமதித்துள்ளது. 2017-2018-ம் ஆண்டில், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வறட்சி நிவாரண நடவடிக்கையாக, சீரான முறையில் குடிநீர் வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.120 கோடியை வழங்குவதற்கு அரசு அனுமதித்துள்ளது. மேலும், மாநிலப் பேரிடர் நிவாரண நிதியத்திற்கு மாற்றம் செய்வதற்கு ரூ.1799.75 கோடி தேவைப் படுகிறது. இவற்றிற்கென இத்துணை மதிப்பீடுகளில் ரூ.1,919.75 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தில் இருந்து ரூ.608 கோடி செலவில் 1,435.96 கிலோ மீட்டர் நீளமுள்ள 460 ஊராட்சி ஒன்றியச் சாலைகள் மற்றும் ஊராட்சி சாலைகளை இதர மாவட்டச் சாலைகளின் தரத்திற்கு மேம்படுத்துதல் மற்றும் நிலை உயர்த்தும் பணிகளுக்கு அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சி, கோயம்புத்தூர் மற்றும் சேலம் மாநகராட்சிகளுக்கு வட்டியில்லா வழிவகை முன்பணமாக ரூ.793.81 கோடியை அரசு அனுமதித்துள்ளது. மாநில நெடுஞ்சாலை, முக்கிய மாவட்டச் சாலைகள் மற்றும் இதர மாவட்டச் சாலைகளின் குறித்தகால பராமரிப்புச் செலவினங்களுக்காக அரசு கூடுதலாக ரூ.300 கோடியை அனுமதித்துள்ளது.

புறவழிச்சாலை, வட்டச்சாலை மற்றும் 6 வழிப்பாதைகள் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக அரசு ரூ.594.58 கோடிக்கு திருத்திய நிர்வாக அனுமதி அளித்துள்ளது. அரியலூர் சிமெண்டு அலகின் விரிவாக்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக, டான்செம் நிறுவனத்திற்கு வழிவகை முன்பணமாக ரூ.300 கோடியை அரசு அனுமதித்துள்ளது.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

முன்னதாக, சட்டசபையில் இதற்கான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

மூலக்கதை