சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி

தினமலர்  தினமலர்
சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி

பெங்களூரு: சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பதற்காக, பணம் பெற்றதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரித்து வரும், வினய்குமார் கமிஷன் அளித்த அறிக்கை குறித்து தெரிவிக்கும்படி, தகவலறியும் உரிமை சட்டத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரி, ரூபா, மனு தாக்கல் செய்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிறையில், சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பதற்கு, அப்போதைய சிறை துறை, டி.ஜி.பி., சத்யநாராயண ராவ், இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, ஐ.பி.எஸ்., அதிகாரி, ரூபா, புகார் தெரிவித்திருந்தார்.

ரூபாவின் குற்றச்சாட்டை விசாரித்த, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, வினய் குமார் தலைமையிலான கமிஷன், மாநில உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தது. இந்நிலையில், வினய் குமார் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை கேட்டு, சிறை துறை செயலரிடம், தகவல் பெறும் உரிமை சட்டத்தில், நேற்று முன்தினம், ரூபா, மனு தாக்கல் செய்துள்ளார்.

இது குறித்து, ரூபா அளித்த பேட்டி: வினய் குமார் அறிக்கையில், என்ன கொடுத்துள்ளார் என்பது பற்றி தெரியவில்லை. அதை அறிந்து கொள்வதற்காக, தகவலறியும் உரிமை சட்டத்தில் அறிக்கை கேட்டுள்ளேன். சிறையில் சிறப்பு வசதி செய்து கொடுப்பது குற்றம் என்றும், இது தொடர்பாக யாராவது புகார் அளித்தால், 45 நாட்களுக்குள், வழக்கு முடிக்க வேண்டும் என்றும், ஒரு வழக்கில், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. நான் புகார் அளித்து, பல நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை; இது நீதிமன்ற அவமதிப்பு செயல் இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை