தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை

தினமலர்  தினமலர்
தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை

சென்னை: ஆர்.கே.நகரில் பா.ஜ.,வுக்கு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசை, தமிழ் தெரியாத தெலுங்கு பாட்டியிடம், சின்னத்தை பார்த்தாவது ஓட்டு போடுங்க என, புரிய வைப்பதற்காக, நீண்ட நேரம் போராடினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில், பா.ஜ., சார்பில், கரு.நாகராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு, தாமரை சின்னத்தில் ஓட்டு கேட்டு, தமிழக மாநில தலைவர், தமிழிசை, கொருக்குப்பேட்டை, குமரன் நகர், நேரு நகர், அஜீஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, தெருவில் அமர்ந்திருந்த ஒரு பாட்டியிடம் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முடியல...

'பா.ஜ.,விற்கு தாமரை சின்னத்தில் ஓட்டு போடுங்க...' எனக்கூற, அவர், தெலுங்கில் பேசினார். இதையடுத்து, தெலுங்கா எனக் கேட்ட தமிழிசை, 'தமிழ் தெரியலைன்னாலும் பரவாயில்ல, இந்த தாமரை சின்னத்தை பார்த்து, அதுல ஓட்டு போடுங்க' எனக்கூறி, நீண்ட நேரம் போராடி புரிய வைக்க முயன்றார்.

நிச்சயம் மாற்றம்:

பின், நிருபர்களிடம் தமிழிசை பேசியதாவது: மக்கள் தற்போது பிடித்துள்ள மோசமான அரசியலில் இருந்து விடுபட்டு, நியாயமான அரசியலுக்கு வர வேண்டும். ஆர்.கே.நகரில், பள்ளி, கல்லுாரி, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை உள்ளது. நாங்கள் ஜெயித்தால், கடல் பகுதியான, ஆர்.கே.நகரில், மத்திய அரசின் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்தப்படும். மீனவர்களுக்காக, குளிர்சாதன கிடங்கு உள்ளிட்ட பல வசதிகள் செய்து கொடுக்கப்படும். மக்கள், பா.ஜ.,விற்கு ஓட்டு போட்டால் நிச்சயம் மாற்றம் வரும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை