பாகிஸ்தானை சேர்ந்த 5 சிறார்களுக்கு மருத்துவ விசா: அமைச்சர் சுஷ்மா தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தானை சேர்ந்த 5 சிறார்களுக்கு மருத்துவ விசா: அமைச்சர் சுஷ்மா தகவல்

புதுடெல்லி: பாகிஸ்தானை சேர்ந்த 5 சிறார்கள், சிகிச்சைக்காக இந்தியா வருவதற்கான விசா வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக இந்தியா வந்து செல்கின்றனர்.

10 மாத குழந்தையான முகமது அகமது மற்றும் சிறார்கள் அபுசார், மோகித், ஸைனாப், முகமது ஸைன் ஆகிய 5 பேரின் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளதால், விசா வழங்கும்படி பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இதுகுறித்து பரிசீலனை செய்த வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சிறார்களுக்கு உடனடியாக விசா வழங்க அனுமதி அளித்துள்ளார். இதுதவிர, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்தியா வர விண்ணப்பித்த ஹாஜி ஆசிக் ஹுசைன் என்பவரின் விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவருக்கு விசா வழங்கப்படும் என சுஷ்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் இருந்துவரும் நிலையில், பாகிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ விசா உடனடியாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

.

மூலக்கதை