கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது: ராஜஸ்தான் போலீசார் அதிரடி

தினகரன்  தினகரன்

ஜோத்பூர்: ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக போலீசாரை தாக்கிய செங்கல்சூளை உரிமையாளர் தேஜாராம் உட்பட 4 பேரை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தனர். செங்கல்சூளை உரிமையாளரின் மனைவி பித்யா மற்றும் மகள்கள் சுகுணா, ராஜல் ஆகியோரை ராஜஸ்தான் போலீஸ் கைது செய்தது.  கொள்ளையர்களை பிடிக்க சென்ற பெரியபாண்டியன் உள்ளிட்ட தமிழக போலீசாரை தாக்கியதால் ராஜஸ்தான் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட நாதுராமின் கூட்டாளி தினேஷை விசாரணைக்காக தமிழகம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டிச.13- ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் கொள்ளையர்களை சுற்றி வளைத்த தனிப்படையினர் அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், கொள்ளையர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் படுகாயம் அடைந்தார்.இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கினர். போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவேராஜஸ்தானில் கொள்ளை வழக்கு ஒன்றில் கைதான தினேஷ்  சவுத்ரிக்கு கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வைத்து தினேஷ் சவுத்ரியை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி நாதுராமை பிடிக்கும் பணியிலோ போலீசார் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை