அரசு நலத்திட்ட உதவிகளுக்கு ஆதார் எண் இணைப்பு: மார்ச் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி:  வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை பெற ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு அவகாசம் அளித்ததை உச்சநீதிமன்றம் ஏற்றது. அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம் அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்த கருத்து ஏற்கபட்டுள்ளது. இதேபோல் செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்க 2018 மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக வங்கி கணக்கு தொடங்கும் போது ஆதார் எண் கட்டாயம் தேவை என்பது தொடர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இவ்வழக்கு விசாரணையின் போது ஆதார் இணைப்புக்கு ஆதரவான மற்றும் எதிர்ப்பான வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளில் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், ஆதார் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள பிரதான வழக்குகள் மீதான இறுதிக்கட்ட விசாரணை ஜனவரி 17ம் தேதி தொடங்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.முன்னதாக நலத்திட்டங்களின் பலன்களை பெற ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 31ம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்தது. இதேபோல் செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்க 2018 பிப்ரவரி 6ந்தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்குகளை விசாரித்தது. வழக்கு விசாரணையின்போது, வங்கி கணக்கு, பான் கார்டு உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 13ம்வெளியிட்ட அறிவிப்பில், வங்கி கணக்கு மற்றும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வருகிற 2018 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்டிருந்தது. ஆனால் செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான காலக் கெடுவை நீட்டிப்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்க 2018 பிப்ரவரி 6ந்தேதி கடைசி நாள் என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அடுத்த ஆண்டு பிப்ரவரி 6ம் தேதிக்குள் ஆதார் எண்ணை செல்போன் சேவைகளுடன் இணைப்பது கட்டாயம் என்ற காலக்கெடுவை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கலாம் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் கூறியிருந்தார்.

மூலக்கதை