பாலியல் பலாத்கார வழக்குகளில் தடயங்களை உடனே சேகரிக்க போலீசாருக்கு உபகரணங்கள் முதல்கட்டமாக 5,000 பெட்டிகள் கொள்முதல்

தினகரன்  தினகரன்
பாலியல் பலாத்கார வழக்குகளில் தடயங்களை உடனே சேகரிக்க போலீசாருக்கு உபகரணங்கள் முதல்கட்டமாக 5,000 பெட்டிகள் கொள்முதல்

புதுடெல்லி : நாட்டில் சமீப காலமாக பாலியல்  பலாத்கார சம்பவங்கள் அதிகமாகி உள்ளன. இந்த வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதற்காக, நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு சிறப்பு  மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பெட்டிகள் வழங்கப்பட உள்ளன. மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இவற்றை கொள்முதல் செய்துள்ளது. இந்த உபகரணங்கள் அடங்கிய பெட்டிகள், நாடு முழுவதும் உள்ள குறிப்பிட்ட சில காவல் நிலையங்களுக்கு முதல் கட்டமாக வழங்கப்பட உள்ளது. மேலும், மாநில அரசுகளும் இந்த உபகரண பெட்டிகளை வாங்கி காவல் நிலையங்களுக்கு வழங்க வேண்டும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் காவல் நிலையங்களுக்கு வழங்குவதற்காக முதல் கட்டமாக   விசாரணை உபகரணங்கள் அடங்கிய 5 ஆயிரம் பெட்டிகள்  வாங்கப்பட்டு உள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘‘ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் தலா 5 உபகரண பெட்டிகள் வழங்கப்படும். இவற்றில் உடனடி மருத்துவ விசாரணை மற்றும் பாலியல் பலாத்காரம், பாலியல் தாக்குதல் வழக்குகளில் தடயங்களை சேகரிப்பதற்கான உபகரணங்கள் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் டெஸ்ட் டியூப், பாட்டில் உள்ளிட்டவை இருக்கும். இவை ரத்த மாதிரிகள், விந்தணு, வியர்வை உள்ளிட்டவற்றை சேகரித்து தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்க பயன்படுத்தப்படும். இவற்றில் சீல் வைக்கப்பட்ட நேரம், வழக்கு விசாரணையில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி, மருத்துவர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும்’’ என்றார்.1.10 லட்சம் பலாத்கார வழக்குநாடு முழுவதும் 2014-2016ம் ஆண்டுகளில் மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 333 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளதாக அரசு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2014ம் ஆண்டு 36,735 வழக்குகள், 2015ம் ஆண்டு 34,651, 2016ம் ஆண்டு  34,651 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2016ம் ஆண்டில் ஒட்டு மொத்தமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 3 லட்சத்து 38 ஆயிரத்து 954 வழக்குகள் பதிவாகி உள்ளன.

மூலக்கதை