போதை பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க தேசிய செயல் திட்டத்தை எய்ம்ஸ் உருவாக்க வேண்டும் : செப்.7 வரை உச்ச நீதிமன்றம் கெடு

தினகரன்  தினகரன்
போதை பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க தேசிய செயல் திட்டத்தை எய்ம்ஸ் உருவாக்க வேண்டும் : செப்.7 வரை உச்ச நீதிமன்றம் கெடு

புதுடெல்லி : ‘சமூகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலை தடுக்க, தேசிய செயல் திட்டத்தை வரும் செப்டம்பர் 7ம் தேதிக்குள் உருவாக்க வேண்டும்’ என எய்ம்ஸ் நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு கடந்தாண்டு நடத்திய ஆய்வில், தலைநகர் டெல்லியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் 100 சதவீத குழந்தைகள் போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் என தெரிவித்துள்ளது. இவர்களில் 95.5 சதவீதம் பேர் குழந்தைகள் நல காப்பகத்தில் உள்ளனர். இவர்களில் 93 சதவீதம் பேர் போதைப் பொருள் பயன்படுத்தியவர்கள் எனவும் தெரிவித்துள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2014ம் ஆண்டே தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று பொதுநலன் வழக்கு தாக்கல் செய்தது.  அதில், போதைப் பொருள் அச்சுறுத்தலில் இருந்து குழந்தைகளை மீட்க தேசிய செயல் திட்டம் உருவாக்கவும், போதைப் பொருள் பாதிப்பு பற்றி பள்ளி பாடத் திட்டத்தை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.  இந்த வழக்கில் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘போதைப் பொருள் அச்சுறுத்தலை போக்க தேசிய செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். போதைப் பொருள் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும்’ என கூறியிருந்தது.ஆனால், இந்த உத்தரவுப்படி மத்திய அரசு செயல்படவில்லை என நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி நடத்தும் ‘பச்பன் பச்சோ அந்தோலன் அமைப்பு’ உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. இது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திராசூட் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் மணீந்தர் சிங், கூடுதல் அவகாசம் கேட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், ‘போதைப் பொருள் அச்சுறுத்தல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை என்பதால், இது குறித்து எய்ம்ஸ் உயர்நிலைக் குழு தேசிய செயல் திட்டத்தை உருவாக்கி, அதை செப்டம்பர் 7ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இதில் எந்த தாமதமும் கூடாது’ என உத்தரவிட்டனர்.

மூலக்கதை