தொழிலாளரை சிறைபிடித்த மாவோயிஸ்டுகள் தமிழகத்திற்கு தப்பினரா?

தினகரன்  தினகரன்
தொழிலாளரை சிறைபிடித்த மாவோயிஸ்டுகள் தமிழகத்திற்கு தப்பினரா?

திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு அருகே தொழிலாளர்களை சிறைப் பிடித்த மாவோயிஸ்டுளை தேடும் பணியில் அதிரடிப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கேரளாவின் வயநாடு மாவட்டம் மேப்பாடியில் ஏராளமான தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. இங்குள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான எஸ்டேட்டில் கட்டிட பணிகளுக்காக மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அலாவுதீன், மக் பூன், காசிம் ஆகிய 3 தொழிலாளர்கள் வந்திருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரையும் ஆயுதம் ஏந்திய பெண் உள்பட 4 மாவோயிஸ்டுகள் பிடித்து சென்றதாக கூறப்படுகிறது.இவர்களில் 2 பேர் அன்றிரவே மாவோயிஸ்டுகளின் பிடியில் இருந்து தப்பினர். பின்னர் 2 பேரும் எஸ்டேட் உரிமையாளரிடம் மாவோயிஸ்டுகள் கடத்திய விவரத்தை கூறினர்.இதுகுறித்து அவர் மேப்பாடி போலீசுக்கு தகவல் ெதரிவித்தார்.இதையடுத்து வயநாடு எஸ்பி கருப்பசாமி தலைமையிலான போலீசார் மற்றும் தண்டர்போல்டு அதிரடிப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இரவு நேரம் ஆனதாலும், கனமழை பெய்து கொண்டிருந்ததாலும் போலீஸ் மற்றும் அதிரடிப்படையால் காட்டுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே மாவோயிஸ்டுகள் பிடித்து வைத்திருந்த 3வது நபரும் தப்பி வந்தார். இவர்கள் 3 பேரிடமும் போலீசார் விசாரித்தனர்.இதில் மூவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் மூவரையும் பிடித்து வைத்திருந்தது மாவோயிஸ்டுகள் தானா என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது. மேலும், தொழிலாளரை பிடித்து வைத்திருந்தது மாவோயிஸ்டுகளாக இருந்தால், அவர்கள் அங்கிருந்து வனப்பகுதி வழியாக தமிழகத்துக்கு தப்பி செல்லவும் வாய்ப்பு உண்டு. எனவே இதுகுறித்து கேரள போலீசார் தமி்ழக போலீசுக்கு தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை