தீப்பெட்டி, நொறுக்கு தீனிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
தீப்பெட்டி, நொறுக்கு தீனிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் வலியுறுத்தல்

டெல்லி: நொறுக்கு தீனிகள், தீப்பெட்டி, ஊறுகாய் உள்ளிட்ட பொருட்களுக்கு வரிவிலக்கு மற்றும் வரிகுறைப்பு அளிக்க வேண்டும் என்று டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.டெல்லியில் நேற்று 28வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்ற கூட்டம் மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடந்தது. இதில், அனைத்து மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் வணிகவரித்துறை முதன்மை செயலாளர் பாலச்சந்திரன், வணிகவரி ஆணையர் சோமநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: இடைமாநில வர்த்தகத்தின்போது விதிக்கப்படும் ஐஜிஎஸ்டி எனப்படும் ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரியானது மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே சரிசமமாக பிரிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும். இந்த நிலுவை தொகையானது காலதாமதமின்றி தொடர்ந்து வழங்கப்பட வேண்டும், தற்போது நிலுவையாக உள்ள தொகையில் 90 சதவீத தொகையை இந்த மாத இறுதிக்குள் மாநிலங்களுக்கு வழங்கிட வேண்டும் என்றார்.கூட்டத்துக்குப் பிறகு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:சட்டக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 48 சட்டத் திருத்தங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தம் தொடர்பாக தமிழகத்தின் சில கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன. இந்த சட்டத் திருத்தங்கள் அனைத்தும் வரி செலுத்துவோருக்கு உகந்ததாக அமைந்துள்ளதால் இதில் பெரும்பான்மையான சட்டத் திருத்தங்கள் தமிழ்நாட்டிற்கு ஏற்புடையது.சென்னையில் ஜிஎஸ்டி தீர்ப்பாயம்:ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்வதற்கான தேசிய அளவிலான மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை சென்னையில் அமைப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த 23வது ஜிஎஸ்டி மன்ற கூட்டத்தில், 28 சதவீதம் வரிக்கு உட்பட்டிருந்த 177 வகையான பொருட்களின் மீதான வரி 18 சதவீதம் ஆக குறைக்கப்பட்டதோடு, பல பொருட்கள் மீதான வரியும் மாற்றியமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற 25வது மன்ற கூட்டத்திலும் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி விகிதமானது மாற்றியமைக்கப்பட்டுள்ளன.தமிழகம் முன்வைத்து நிலுவையில் உள்ள வரிவிலக்கு மற்றும் வரிகுறைப்பு தொடர்பான கோரிக்கைகளான கைத்தறி மற்றும் விசைத்தறி பொருட்கள், கொள்கலனில் அடைக்கப்பட்டு வணிக சின்னம் இடப்பட்ட அரிசி மற்றும் இதர உணவு தானியங்கள், ஜவ்வரிசி, தீப்பெட்டி, ஊறுகாய், விவசாய கருவிகள், ஜவுளி தொழிலில் பயன்படும் இயந்திர பாகங்கள், வணிக சின்னமிடப்படாத நொறுக்கு தீனிகள், பேக்கரி பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள், பல்வேறு வகையான வத்தல்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக்கூடிய கருவிகள், பிஸ்கட்டுகள், உரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீது வரி விலக்கு மற்றும் வரி குறைப்பு செய்வது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது என்றார்.

மூலக்கதை